மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் இன்று (மே 21) தனது 60ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் மோகன்லால் நடித்த, 'இருவர்', 'சிறைச்சாலை', 'உன்னைப்போல் ஒருவன்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இவரின் பிறந்த நாளுக்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் கமலுடன் மோகன்லால் இணைந்து நடித்திருந்தார். இப்படத்திற்கு முன்பே இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். தமிழில் ஒளிப்பரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். அதேபோல் மலையாளத்தில் ஒளிப்பரப்பான 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கினார். மேலும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த 'த்ரிஷயம்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்தில் கமல் நடித்து மாபெரும் வெற்றி பெற்றிருந்தது.
இன்று (மே 21) மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள மோகன்லால், உங்கள் முதல் படத்திலிருந்தே உங்களை நேசிக்கிறேன். உங்கள் பணியின் தரத்தைக் கண்டு பொறாமை கொண்டேன். நான் உங்களோடு சேர்ந்து பணிபுரிகையில் இன்னும் அதிகமாக உங்களை நேசித்தேன். நீடுழி வாழ்க என் இளைய சகோதாரா" என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: 'ராம்' கைவிடப்பட்டதா? - இயக்குநர் ஜீத்து ஜோசப் விளக்கம்