இந்தியாவில் நடைபெறும் கும்பல் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரேவதி, வெற்றிமாறன், அனுராக் கஷ்யப், மணிரத்னம், அபர்ணா சென், சியாம் பனேகல், ராமச்சந்திர குஹா, அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் கும்பல் கொலைக்கு எதிராக மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இதற்கு எதிராக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா எனும் வழக்கறிஞர் வழக்குப் பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவின் பேரில் முசாஃபர்பூர் காவல் நிலையத்தில் 49 இந்திய பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கு எதிராக பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இந்த விவகாரம் தொடர்பான தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத்தில் பிரதமரின் கருத்துகளை பார்க்கும்போது அவர் ஒற்றுமையான இந்தியாவை விரும்புவது புரிகிறது. ஆனால் மாநிலமும் அதன் சட்டமும் அதை ஆத்ம ரீதியாக பின்பற்றவில்லை. எனது 49 நண்பர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, பிரதமர் விருப்பத்துக்கு எதிரானது. எனவே உயர் நீதிமன்றங்கள் இந்த 49 பேர் வழக்கை விலக்கி வைத்து ஜனநாயகத்தின் பக்கம் நீதியை நிலைநிறுத்த வேண்டும் என ஒரு குடிமகனாக கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் வாசிங்க: ‘கடவுளே’ என கோஷமிட்ட ரசிகர்கள் - கடுப்பான அஜித்!