கடந்த 2017ஆம் ஆண்டு 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் தலைப்பை கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். திடீரென மநீம கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்ததால் படம் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறினார். முழுநேர அரசியல்வாதியாக இருந்து மக்களவைத் தேர்தலை சந்தித்து விட்ட நிலையில், அரசியல் பின்னணி கொண்ட கதையை இயக்க இருக்கிறார் கமல்ஹாசன்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு படம் தயாரிக்கும்போது மனதில் திருப்திகரமாக இருக்கும் அப்படிப்பட்ட படம்தான் 'தலைவன் இருக்கின்றான்'. இப்படத்தில் உள்ள தகவல்களை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். எதிர்பார்ப்புடன் காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே 'தலைவன் இருக்கின்றான்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ரஹ்மானை சந்தித்து பேசும் புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் அரசியல் கதையோடு இயக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் லைகா நிறுவனம் கமலுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 'தலைவன் இருக்கின்றான்' திரைப்படம் ரசிகர்களின் இளைஞர்களின் மனதில் ஆழமான சிந்தனையை விதைக்கும் என்றும், ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.