சென்னை: மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நாரத கான சபாவில் நடைபெற்றது. நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கமல் பேசுகையில், " நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் கே.பி. (கே.பாலசந்தர்) சார் தான்.அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் ஸ்ரீரீவத்சன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. கே.பி. சாருக்கு அவர் கதை எழுதியிருக்கிறார்.
அவருக்கு நிறைய கதை சொல்லியிருக்கிறேன். ஆனால் எழுதியதில்லை. ஒரு நூல் கொடுத்தால் போதும் அதை அழகான துணியாக மாற்றிவிடுவார் கே.பி. சார். இன்னொரு காரணம் நானும் டிகேஎஸ் நாடகக் குழுவிலிருந்து வந்தவன். என்னை நாடகத்தில் நடிப்பியா எனக் கேட்டு நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார்கள். அப்படித்தான் நாடக குழுவில் இணைந்தேன்.
எல்லோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு போவார்கள், ஆனால் நான் சினிமாவில் இருந்து நாடகத்திற்கு வந்தேன், அந்த நாடகங்கள் பேரனுபவமாக இருந்தது.
மீண்டும் என்னை சினிமாவை நோக்கி தள்ளி விட்டது நாடகம் தான். மீண்டும் நாடக மேடைக்கு வர நிறைய ஆசைப்பட்டேன், யாரும் என்னை இணைத்து கொள்ளவில்லை. நாடக மேடை என்பது மிகச்சிறப்பானது. ஸ்ரீரீவத்சன் எடுத்துக்கொண்ட முயற்சி மிகச்சிறப்பானது.
நான் நாடகத்தின் ரசிகன் என்பது தான் எனது முதல் தகுதி. நிஜமான திறமையை அடையாளப்படுத்துவது நாடக மேடை தான். சினிமாவில் நான் நடிக்கக்கூட தேவையில்லை.
ஹோலோகிராம் மூலம் என் போன்ற உருவத்தை கொண்டு வந்து விட முடியும் அந்தளவு டெக்னாலஜி வந்துவிட்டது. ஆனால் இங்கு மேடையில் நிகழ்வது தான் நிஜமான திறமை. ஒரே ஒரு தடவை பார்த்த சோ நாடகத்தின் ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் ஞாபகமிருக்கிறது.
எனக்கு நல்ல நாடகங்கள் பார்க்க மிகவும் பிடிக்கும். மீண்டும் நாடகங்கள் நடிக்க ஆசை. இவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்டிப்பாக வேறு மேடை ஏற உள்ளேன்.