பிரபல இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா எழுதியுள்ள Sebastian & sons என்கின்ற புத்தக வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள கலாக்ஷேத்ராவில் நடைபெற இருந்தது.
இந்த விழாவுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அனுமதியை ரத்து செய்வதாகக் கூறி கடிதம் அளித்து கலாக்ஷேத்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளது.
டி.எம்.கிருஷ்ணாவின் புத்தகத்தில் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்திருப்பதால் புத்தக வெளியீட்டு விழா நடத்த அனுமதி அளிக்க இயலாது என்று விளக்கம் அளித்திருந்தது.
இந்த நிலையில், புத்தக வெளியீட்டு விழா திட்டமிட்டபடி ஞாயிற்றுக்கிழமை வேறு இடத்தில் நடக்கும் என்று டி.எம்.கிருஷ்ணா தரப்பு தெரிவித்திருந்தது.
கலாக்ஷேத்ராவின் இந்தச் செயலை அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனிடையே வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை தரமணியில் உள்ள ஏசியன் காலேஜ் ஆப் ஜெர்னலிசம் வளாகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வரவேற்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அவரது அந்தப்பதிவில், 'இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவின் Sebastian & sons என்கின்ற புத்தக வெளியீடு, பிப்ரவரி 2ஆம் தேதி மாலை, ஏசியன் காலேஜ் ஆப் ஜெர்னலிசம் தரமணியில் தடையின்றி, பயமின்றி நடக்கிறதாம், வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு ட்வீட் பதிவில், 'மேல் நாட்டாருக்கு அடங்கி நடப்பதும், மேல் சாதிக்கு அடங்கி நடப்பதும், மேல் அதிகாரிக்கு அடங்கி நடப்பதும் வழிவழி வந்த பயத்தால், பக்தியால் வருவது. இந்த அளப்பெரிய குணாதிசயங்களில், எது ஒன்று சற்றே குறைந்தாலும், க்ஷேத்திரப்ரவேசத்திற்கு அருகதை "அற்றவனாகி" விடுவான் ஒரு இந்தியன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வந்த வேகத்தில் உச்சம் தொட்ட மாளவிகா - அடுத்த ஹீரோ நம்ம...?