தன் 61 வருட கலைப் பயணத்தில் பாரபட்சமின்றி விருதுகளை வாரி குவித்துள்ள நடிகர் கமல் ஹாசன், 80களின் மத்தியில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த வணிக ரீதியான பல வெற்றிப் படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் ஒரு மாபெரும் கமர்ஷியல் ஹீரோவாகக் குடியேற பல வாய்ப்புகளைக் கொண்டிருந்தபோதும், தன் தனிப்பட்ட கலை தாகம் காரணமாக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடிப்பதிலேயே தன்னிறைவு பெற்றுள்ளார். தான் எவ்வளவு பொறுப்புமிக்க கலைஞன் என்பதை இதன் மூலம் மிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார், கமல் ஹாசன்.
80களின் மத்தியில் சகலகலா வல்லவன், ஒரு கைதியின் டைரி, காக்கிச்சட்டை, வெற்றி விழா என வெற்றிப் படங்களை அளித்து ஒரு சிறந்த கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்த அவர், அந்தக் கமர்ஷியல் பயணத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ள நினைத்திருந்தால் செய்திருக்கலாம்!
ஆனால், அதையெல்லாம் தாண்டி மீண்டும் மகாநதி, ஹே ராம் எனத் தன் கலை தாகத்தை நோக்கிய தேடலில் மாறுபட்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியதை இன்றைய கமர்ஷியல் ஹீரோ வட்டத்தில் சிக்கிக் கொண்ட விஜய், அஜித் உள்ளிட்ட வேறு எந்த நடிகரும் செய்ய முனைவது அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல!
சக்திவேலில் இருந்து உருவெடுக்கும் வேலு நாயக்கர், காந்தியை கொலை செய்ய திட்டமிட்ட சாகேத் ராமின் பக்கங்கள், அவனது நியாயங்கள், கொத்தாளத் தேவரின் பார்வையிலான விருமாண்டி, அன்னையைப் பிரிந்த துயர், வளர்ப்புத் தாயின் வெறுப்பால் கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்த கலவையாக வளரும் நந்துவின் பக்கங்கள், சாதாரண மனிதனுக்குரிய அத்தனை குறைகளையும் கொண்டு, தன் இறுதிப் படைப்பை நிகழ்த்திவிடத் துடிக்கும் கலைஞன் மனோரஞ்சன் என ஒரு நபருக்குள் இருக்கும் வேறுபட்ட பக்கங்களை எடுத்துக்காட்டி, இவர் நல்லவரா, கெட்டவரா அல்லது ’மய்யமா’ எனக் குழப்பத்தில் ஆழ்த்தும் கதாபாத்திரங்களை திறம்பட கையாள்வது கமலுக்கு என்றைக்குமே விருப்பத்திற்குரிய ஒன்று!
ஆனால் இன்றைக்கு ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக உருவெடுக்க நினைக்கும் கமல்ஹாசன், தான் சினிமாவில் ரசித்து செய்த இந்த விருப்ப கதாபாத்திரங்களை அரசியல் வாழ்விலும் செலுத்த முயற்சிக்கிறாரோ என்ற ஐயமே ஏற்படுகிறது.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல்ஹாசன் ”நீங்கள் இடதுசாரியா, வலதுசாரியா எனக் கேட்கிறார்கள். அதனால்தான் ’மய்யம்’ என என் கட்சிக்குப் பெயர் வைத்தேன்” எனத் தன்னிலை விளக்கம் அளித்தார்.
சென்ற வருடம் தேர்தல் தினத்தன்று பொன்பரப்பியில் இரு பிரிவினருக்கு இடையே நடந்த சாதிய வன்முறை சம்பவங்கள் குறித்து வருத்தம் தெரிவித்து "மதம் கொண்டு வந்தது சாதி, இன்றும் மனிதனைத் துரத்துது மனு சொன்ன நீதி" என தன் திரைக்கு வரவே முடியாத மருதநாயகம் படத்தில் ஒரு ’பொறுப்புள்ள கலைஞனாக’ தன் அண்ணன் இளையராஜாவுடன் தான் இணைந்து எழுதிய பாடல் வரிகளை மேற்கோள்காட்டி ட்வீட் செய்திருந்தார் கமல்.
ஆனால் வட இந்தியாவில், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பல வழக்குகளின் தீர்ப்புகள் இன்றளவும் ’மனு நூலை’ மேற்கோள்காட்டி வழங்கப்பட்டு வரும் நாட்டில், ”இன்று புழக்கத்தில் இல்லாத மனுஸ்மிருதி நூலைப் பற்றிய விமர்சனம் தேவையற்றது” என்று கருத்து தெரிவிப்பது ஒரு ’பொறுப்பற்ற அரசியல்வாதியாக’ மட்டுமே அவரை முன்னிறுத்தாமல் பொறுப்பற்ற கலைஞனாகவுமே பிரகடனப்படுத்துகிறது.
கியர் நியூட்ரலில் இருந்தால் காருக்கே கேடு! சினிமாவில் அதற்குரிய இலக்கணத்தோடு ’மய்ய’ நீரோட்டத்தில் பயணிக்கும் ஒரு கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும், ஆனால் அரசியலில் அல்ல.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசன்
ஆகவே தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தாங்கள் உருவெடுத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்வதையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சியான பிக்பாஸில் பெரியார், மண்டோ, மகாபாரதம் எனக் கலவையாகப் பேசி இலக்கற்ற மறைமுகப் பிரசாரத்தை மேற்கொள்வதையும், ”நல்லவரா கெட்டவரானு தெரியல”, ”கடவுள் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை”, "இந்த மனசு இருக்கே... அதான் கடவுள்” "கடவுள் இல்லைனு சொல்லல இருந்தா நல்லாருக்கும்” என வசனம் பேசி மய்ய கதாபாத்திரத்திலேயே தங்கி அரசியல் செய்ய முயற்சிப்பதையும் கைவிட்டு, உங்கள் நிலைபாட்டை ஆணித்தரமாக வெளிப்படுத்துங்கள். அப்போதுதான் மய்யம் தமிழ்நாட்டில் மை வாங்கும்!
இதையும் படிங்க :தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி மக்கள் நீதி மய்யம் - கமல்ஹாசன்