சென்னை: இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் குவாலியர் நகரில் நடைபெற்று வருவதாக படத்தின் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களை வைத்து ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின. இந்தச் சண்டைக் காட்சிக்கு 40 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான குவாலியரில் தற்போது இந்தியன் 2 படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். இதனை படத்தின் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் அமிர்தா ராம் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
1996இல் ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாகி வருகிறது. படத்தில் ஷங்கர் - கமல்ஹாசன் மீண்டும் இணைந்துள்ளளனர். நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பாலிவுட் நடிகர் அனில் கபூர் வில்லனாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் கமல்ஹாசன் முதல் பாகத்தில் தோன்றிய வயதான கேரக்டரான சேனாபதியாக நடிக்கிறார். அவரது மனைவியாக 85 வயது மூதாட்டியாக காஜல் அகர்வால் தோன்றவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிடப்பட்ட நிலையில், படம் தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.