நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஹேராம் படத்திற்காக நான் ஆராய்ச்சி செய்தபோது, காந்தி போட்டிருந்த கண்ணாடியும் செருப்பும் அந்த கலவரத்தில் காணாமல் போனதாக ஒரு குறிப்பு இருந்தது. நான் அதைக் கையில் எடுத்துக்கொண்டு, படத்தின் கதாநாயகன் வாழ்நாள் முழுவதும் அந்த செருப்பை நெஞ்சோடு வைத்துக்கொண்டு இறக்கிறான் என்று கதையில் வைத்திருந்தேன்.
அந்த இரண்டு செருப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு செருப்பு வந்துவிட்டது. இந்த ஒத்த செருப்பு விழாவில், என் மீது வீசப்பட்ட ஒத்த செருப்பு பற்றி யாரும் பேசக்கூடாது என்று பயந்து பயந்து பேசுகிறார்கள். யாரும் பயப்பட வேண்டியது இல்லை. ஒத்த செருப்பை வீசிய அவர்களுக்குத்தான் அவமானம். அதனால் நாம் பயப்படத் தேவையில்லை என்பதை பெருமையாக சொல்லிக் கொள்ளலாம் .
விழாவில், இந்தப் படம் சம்பந்தமாக தான் பேச வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இந்த அரசியல்வாதிகளே இப்படித்தான், மேடை கிடைத்தால் பேசிவிடுவார்கள், நான் இந்த மேடையை எடுத்துக் கொண்டேன் என்று தெரிவித்தார்.
காந்தியைப் பற்றி இந்த படத்துக்கு பொருத்தமான ஒரு கதையை நான் கூறுகிறேன். காந்தி ஒரு சூப்பர் ஸ்டார், அவர் ரயிலில் செல்லும்பொழுது அவரை பார்ப்பதற்காக அதிக அளவில் மக்கள் கூட்டம் இருந்தது. அவர்களைப் பார்த்து கையசைத்தபடி இருந்தார் காந்தி, அப்போது அவர் காலில் இருந்த ஒரு செருப்பு கீழே விழுந்துவிட்டது. உடனே காந்தி மற்றொரு செருப்பை கழற்றி வீசினார். அவருடன் பயணம் செய்தவர்கள் ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, ஒரு செருப்பு வைத்துக் கொண்டால் எந்த பயனும் இல்லை, அதனால் இரண்டு செருப்பு இருந்தால் வேறு யாராவது பயன்படுத்துவார்கள் என்று கூறினார்.
ஒத்த செருப்பு சைஸ் 7 இசை வெளியீட்டு விழா அந்த இரண்டு செருப்பில் ஒரு செருப்பு இப்போது வந்துவிட்டது. மற்றொரு செருப்பு வரும், அதற்கான அருகதை எனக்கு உண்டு என்று நம்புகிறேன். அந்த ஒத்த செருப்புக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்த விழாவில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு டார்ச் லைட் பொறிக்கப்பட்ட செங்கோலை நடிகர் பார்த்திபன் நினைவுப் பரிசாக வழங்கினார்.விழாவில் இயக்குநர்கள் ஏ .எல். விஜய், கேஎஸ் ரவிக்குமார் ,லிங்குசாமி, நவீன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் விவேக், படக்குழுவினர்கள் கலந்துகொண்டனர்.