இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் களவாணி. காதல், நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பது வருடங்கள் கழித்து களவாணி 2 படத்தை இயக்குநர் சற்குணம் இயக்கியுள்ளார். இப்படத்தில், விமல், ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பணிகள் நிறைவடைந்து படம் வெளிவர தயாராக இருக்கிறது.
மகளிர் குழு தலைவி ஆன ஓவியா - சற்குணம் - ஓவியா
களவாணி -2 படத்தில் ஓவியா மகளிர் குழு தலைவியாக நடித்திருப்பதாக இயக்குநர் சற்குணம் தெரிவித்தார்.
இந்நிலையில் களவாணி-2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவின்போது, நடிகை ஓவியா பேசுகையில், '10 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த முகங்களை இங்கு பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. களவாணி 2 படத்தில் அனைவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போல் படத்தில் பணியாற்றியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதன்பின்னர் இயக்குனர் சற்குணம் பேசுகையில், "நடிகர் விமல் கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் உள்ளதால் அவரால் வர முடியவில்லை. களவாணி படத்தில் ஓவியா பள்ளி மாணவியாக இருந்தார். இந்த படத்தில் மகளிர் குழு தலைவியாக உள்ளார். களவாணி 2 படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்தது இளவரசு, சரண்யா பொன்வண்ணன் ஆகிய இருவரும்தான். அவர்களின் நடிப்பு கண்டிப்பாக பேசும்படியாக இருக்கும்" என்றார்.