சிங்கப்பூரிலுள்ள மேடம் டுஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் தனது மெழுகு சிலையை திறந்து வைத்த நடிகை காஜல் அகர்வால், அதன் அருகே விதவிதமாக புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் மேடம் டுஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில், உலக அளவில் புகழ் பெற்ற பிரபலங்களின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சிங்கப்பூரிலுள்ள மேடம் டுஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாகத் திகழும் காஜல் அகர்வாலின் சிலை அமைக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வால், தனது மெழுகு சிலையை திறந்து வைத்தார். தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த சிலை அருகே தாய், தந்தை, சகோதரி உள்ளிட்டோருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் ட்விட்டர் பக்கத்திலும் இந்தப் புகைப்படங்களை பதிவிட்டு, இப்படியொரு கெளரவம் கிடைத்திருப்பதற்கு மிகுந்த பணிவும், பரவசமும் அடைந்துள்ளேன். உலக அளவில் புகழ் பெற்ற பிரபலங்களுடன் நானும் சிலை வடிவில் நிற்பது கலைஞனின் கண்களால் என்னைப் பார்ப்பது போல் உணர்கிறேன். சிலைக்கும் எனது தோற்றுத்துக்கமான ஒற்றுமை விசித்திரமாக இருப்பதுடன், சிலையின் நுணுக்கங்கள் கண்ணைக் கவரும் விதமாக இருக்கிறது என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.