சமூகத்திற்குத் தேவையான கருத்துகளை சினிமாவில் பேசும் பல திரை நட்சத்திரங்கள் அதை தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்கிறார்களா என்று கேட்டால் ஒருசில நட்சத்திரங்கள் மட்டுமே விதிவிலக்காக சேவை செய்து வருகின்றனர்.
சமூக நீதியை படத்தில் பேசுவதோடு தங்களின் நிஜ வாழ்க்கையிலும் பின்பற்றிவரும் நடிகர்கள் சிலர் தங்களின் ரசிகர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் விளங்குகின்றனர். சமீபத்தில் கூட நடிகர் சூர்யா புதிய தேசியக் கல்விக் கொள்கையை விமர்சித்து பல கேள்விகளை எழுப்பினார். இதற்கு பல ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பின.
அந்த வகையில் தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் தற்போது காவிரி நதியை பாதுகாப்பது தொடர்பாகப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நம் கண் முன்னே காவிரி நதியானது அழிந்து கொண்டிருக்கிறது. இதை பார்க்கும்போது என் மனம் வேதனை அடைகிறது. எனவே நான் காவிரி நதியை மீட்பதற்கு அதன் கரையோரங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்துள்ளேன். என்னுடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்க விரும்புவோர் எனக்கு தேவையான உதவிகளை என்னுடைய காவிரி கூக்குரல் அமைப்பின் பக்கத்தில் அளியுங்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
காவிரி நதியை பாதுகாப்பது குறித்து இதுவரை பலர் பேசியுள்ளனர். எனினும் அதற்கான தீர்வு தற்போது வரை கிட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், தற்போது காஜல் அகர்வால் காவிரி ஆறு பற்றி பேசியிருப்பதால், அவரது ரசிகர்களால் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.