கண்டாங்கி பெண்ணாய் ரசிகர்களின் மனதை கசக்கிப் பிழிந்த காஜல் அகர்வால் இன்று (ஜுன்.19) தனது 36ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவர் ஜுன் 19, 1985ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.
தென்னிந்திய திரைப்படத்துறையில் வெற்றிகரமாக வலம் வரும் காஜல் அகர்வால், முதன்முதலாக இந்தியில் வெளியான "கியூன்!! ஹோ கயா நா" என்ற படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தே, தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.
அதன்பின்னர் இவர் தெலுங்கில் 'லட்சுமி கல்யாணம்' என்ற படத்தின் மூலமாகவே முதன்முதலில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், பிரமாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் உடன் இணைந்து நடித்த 'மக தீரா' திரைப்படமே தெலுங்கு திரையுலகில் இவரை ஜொலிக்கச் செய்தது.
தெலுங்கில் கிடைத்த மிகப்பெரும் வெற்றியின் காரணமாக தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் 'மக தீரா' டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 'மக தீரா' படத்திற்காக பல விருதுகளையும் வாங்கிக் குவித்தார், காஜல்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்த் திரைப்படத்துறையில், இயக்குநர் இமயம் பாரதி ராஜா தனது பொம்மலாட்டம் திரைப்படத்தின் மூலம் காஜலை அறிமுகப்படுத்தினார். ஆனால், அதற்கு முன்னரே இவர் தமிழில் நடித்த மற்றொரு படமான 'பழனி' வெளியாகிவிட்டது.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கார்த்தியுடன் இணைந்து நடித்த 'நான் மகான் அல்ல' திரைப்படத்திற்குப் பின்னரே, தமிழ்த்திரையுலகம் காஜலை கவனிக்கத் தொடங்கியது.