நடிகர் கார்த்தி-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் கைதி. இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாநகரம் திரைப்படத்தைத் தொடந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கும் ரசிகர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். படம் பார்த்த அனைவருக்கும் 'கைதி டில்லி'யை பிடித்துப்போய்விட்டது. அந்த அளவுக்கு இப்படத்தில் கார்த்தி தனது நடிப்பால் மிரட்டியிருப்பது அவரை அடுத்த கட்டத்துக்கு கூட்டிச்சென்றுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர்கள் நரேன், ஜார்ஜ் மரியான், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்களும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
முன்னதாக விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் நேற்று வெளியான நிலையில், இரு படங்களுக்குமே அந்தந்த ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இரு முன்னணி நடிகர்களின் படங்களும் தீபாவளி ரேசில் பங்கேற்று போட்டா போட்டி போட்டுவருகிறது.