தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ரசிக்கத்தக்க ஸ்டைலிஷான படம் 'கடாரம் கொண்டான்' - விக்ரம்

'தூங்காவனம்' பட இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியிருக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’. நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அக்‌ஷரா ஹாசன், அபி ஹசன், லேனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

kadaram

By

Published : Jul 20, 2019, 10:12 PM IST

காதல் திருமணத்தால் பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பிறக்கப் போகும் குழந்தைக்காக காத்திருக்கும் இளம் தம்பதியர் ஆதிரா (அக்‌ஷரா ஹாசன்) மற்றும் வாசு ராஜகோபாலன் (அபி ஹசன்). வாசு ராஜகோபாலன் பயிற்சி மருத்துவராக மலேசியாவில் பணிபுரிகிறார். அதே மலேசியாவில் மிக உயர்ந்த அடுக்குமாடியில் கயிற்றில் தலைகீழாக தொங்கி குண்டடிபட்டு தப்பித்து ஓடுகிறார் கடாரம் கொண்டான் என்கிற கேகே (விக்ரம்).

இவரை இரு அடையாளம் தெரியாத நபர்கள் துரத்தும் நிலையில் திடீர் விபத்தில் சிக்கி மயங்கி விழும் விக்ரமை, வாசு பணிபுரியும் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக காவல்துறையினர் சேர்க்கின்றனர். இந்நிலையில் அந்த நபர்கள் விக்ரமை மருத்துவமனையிலேயே கொலை செய்ய முயற்சிக்கின்றனர். ஆனால் இரவு பணியில் இருக்கும் மருத்துவர் வாசுவால் முறியடிக்கப்படுகிறது. இதனால் வாசுவின் மனைவி ஆதிராவை அவர்கள் கடத்தி சென்று விடுகின்றனர்.

மேலும் அவர்கள் ஆதிராவை விடுவிக்க வேண்டுமென்றால் சிகிச்சை பெறும் விக்ரமை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென கூறுகின்றனர். யார் இந்த கேகே? இவரை துரத்தும் நபர்கள் யார்? தன் மனைவியை மீட்டாரா வாசு என்பதுதான் ஆக்‌ஷன் க்ளைமாக்ஸ் நிறைந்ததே மீதிக் கதை. கட்டுக்கோப்பான உடல், நடை, உடை, சால்ட் அன்ட் பெப்பர் லுக் என ஹாலிவுட் நட்சத்திரம் போன்று ஸ்டைலில் கலக்குகிறார் விக்ரம். அக்ஷரா ஹாசன் தன் உயிரையும் வயிற்றிலுள்ள குழந்தையையும் காக்க போராடும் இடங்களில் நேர்த்தி இருந்தாலும் கதாநாயகிக்கான லுக் மிஸ்.

நடிகர் நாசரின் மகன் அபி ஹசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார். அப்பாவைப் போலவே நடிப்பில் ஆரம்பத்தில் ஸ்கோர் செய்தாலும் கலவையான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இடங்களில் உணர்ச்சியற்ற ரியாக்சன்களால் கொஞ்சம் பயிற்சி தேவை என்றே தோன்றுகிறது. ஆக்‌ஷன், சேஸிங், ரன்னிங் என இடைவேளை வரை கதையே ஆரம்பிக்காமல் செல்வது தொய்வை ஏற்படுத்துகிறது

இடைவேளைக்குப் பிறகு முக்கிய குற்றவாளிகள் என தேடப்படும் இருவர், நூற்றுக்கணக்கான காவலர் முன்னிலையில் காவல் துறை முதன்மை அலுவலகத்திற்குள் நுழைந்து அடித்து நொறுக்குகிறார்கள். பத்து நாட்களில் குழந்தை பிறக்கப்போகும் நிறைமாத கர்ப்பிணி எப்படி ஃப்ளைட்டில் பயணம் செய்தார். வரலாற்று சிறப்புமிக்க டைட்டிலை இந்த படத்திற்கு ஏன் வைக்கப்பட்டது என படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும், முழுப்படத்தையும் தாங்கிப்பிடிக்கும் விதமாய் உயிரோட்டமாய் அமைந்திருப்பது ஜிப்ரானின் பின்னணி இசை.

தமிழ் படம் தான் பார்க்கிறோமா என்ற உணர்வை ஏற்படுத்துகிறது ஸ்ரீநிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு. கிளாஸ், மாஸ் என காட்சிகளில் விஷுவல் ட்ரீட் கொடுத்திருக்கிறார்.திரைக்கதை, வசனம் என எதிலும் தெளிவு இல்லை. படம் முழுக்க தொடரும் ஆக்‌ஷனால் அனைத்து தரப்பு ஆடியன்ஸூக்கு கதை புரியுமா என்பது சந்தேகம். கமல்ஹாசன் பேச்சுகள், ட்வீட்டுகள் மட்டுமல்ல அவர் தயாரிக்கும் படங்களும் புரியாத புதிராகவே இருக்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு சான்று என்றே சொல்லலாம். விக்ரம் படம் என்று எதிர்பார்க்காமல் சென்றால் இந்த படத்தை ரசிக்கலாம். எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். குறைகளை தவிர்த்து பார்த்தால் இது ரசிக்கத்தக்க ஸ்டைலிஷான படம்.

கடாரம் கொண்டான் - லாஜிக் சொதப்பல்.

ABOUT THE AUTHOR

...view details