நடிகர் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியான படம் காப்பான். அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யா - கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்துக்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.
திரையில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் இந்திய பிரதமராக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் உயர் அலுவலராக சூர்யாவும் நடித்திருந்தனர். அதில் ஒரு கட்டத்தில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகும் மோகன்லால் உயிரிழக்கிறார். இதனால் அவரது பாதுகாப்பு அலுவலர் சூர்யா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.
காப்பான் படத்தில் சூர்யா, மோகன்லால் இதைத் தொடர்ந்து நடைபெறும் கதையில் மோகன்லால் மீது தாக்குதலை நடத்தி அவரை கொலை செய்தது யார்? எதற்காக அந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பது பற்றி சூர்யா கண்டறிவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த கதையுடன் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பிரச்னை பற்றியும் பேசியிருப்பார்கள்.
தற்போது காப்பான் படத்தில் நீக்கம் செய்யப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த காட்சி மோகன்லால் கொல்லப்பட்ட பின் நடைபெறுகிறது. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட சூர்யா, வீட்டிலிருந்து மோகன்லாலின் வாரிசான ஆர்யா பிரதமராக பதவியேற்பதை காண்கிறார். பின் கொலை செய்தவர்களை கண்டுபிடிப்பது குறித்து தனது நண்பர் சமுத்திரக்கனியிடம் தெரிவிக்கிறார்.
காப்பான் படத்தில் ஆர்யா பதவியேற்பதை மட்டும் சூர்யா பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதன்பின் சூர்யா நேரடியாக காஷ்மீர் சென்று சம்பவம் நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்வார். தற்போது அதனை விளக்கும் படியான இந்த காட்சி அமைந்துள்ளது.