கரோனா தொற்றின் இரண்டாவது அலையில் திரைப்பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் கரோனா தொற்றால் பாதிகப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் விரைவில் குணம்பெற ரசிகர்களும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நாளை (மே 20) ஜூனியர் என்.டி.ஆர் தனது 38ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ரசிகர்கள் யாரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து ஜூனியர் என்.டி.ஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, " உங்கள் ஒவ்வொருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் குறுஞ்செய்திகள், வீடியோக்கள், அன்பான வாழ்த்துகள் என அனைத்தையும் கண்டேன். உங்கள் பிரார்த்தனையே என்னை இயங்க வைக்கிறது. இந்த அன்புக்கு நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.
நான் நன்றாக இருக்கிறேன். விரைவில் கரோனாவிலிருந்து குணமடைவேன் என நம்புகிறேன். ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்தநாளின் போது என் மீது நீங்கள் காட்டும் அன்பு மதிப்புமிக்கது. இந்த சவாலான காலகட்டத்தில் வீட்டிலிருந்து ஊரடங்கு விதிகளை பின்பற்றுவதே நீங்கள் எனக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு.
நம் நாடு கரோனாவுடனான போரில் இருக்கிறது. நம் முன்களப்பணியாளர்களும் மருத்துவச் சமூகமும் ஒரு கடுமையான தன்னலமற்ற போரில் ஈடுபட்டிருக்கின்றனர். ஏராளமான மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிக்கின்றனர். இது கொண்டாட்டத்துக்கான நேரம் அல்ல. நலிந்தவர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டிய நேரம்.
உங்கள் குடும்பத்தையும் அன்புக்குரியவர்களையும் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாதவர்களுக்கு உதவி செய்வதில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள். இவை அனைத்தும் முடிந்த பிறகு, கரோனாவுக்கு எதிரான பேரில் வென்ற பின் நாம் ஒன்று சேர்ந்து கொண்டாடலாம். முகக்கவசம் அணியுங்கள், வீட்டில் இருங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.