2019ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் சுமார் ஒரு பில்லியன் டாலர் வசூல் சாதனையை ஈட்டியது.
வன்முறையை ஊக்குவிக்கும்படி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தாலும், உலக அளவில் இத்திரைப்படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
சிறந்த நடிகர் ஜாக்வின் பீனிக்ஸ் இதனையடுத்து தற்போது இப்படத்தில் ஜோக்கராக நடித்திருந்த ஜாக்வின் பீனிக்ஸுக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜாக்வின் பீனிக்ஸ் கூறுகையில், “என்னை எப்படி ஜோக்கர் படத்தில் இயக்குநர் எடுத்தார் என்பது தெரியவில்லை. உலகம் முழுவதும் இப்படம் வரவேற்பை பெற்று பல்வேறு விருது விழாவில் வென்று வருகிறது. இதை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன்” என்றார்.
இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது.
ஏற்கனவே 73ஆவது பிரிட்டிஷ் திரைப்பட அகாடமி (பாஃப்டா) விழாவில் சிறந்த நடிகர், சிறந்த பின்னணி இசை உள்ளிட்ட மூன்று விருதுகளை ஜோக்கர் படம் வென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.