92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் ஜோக்கர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்ற நடிகர் வகீன் ஃபீனிக்ஸ் ஆஸ்கர் மேடையில் அனைத்துத் தரப்பு அநீதிகளுக்கும் எதிராகக் குரலெழுப்பி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்ட வகீன் தொடர்ந்து பேசியதாவது:
”குரலெழுப்ப முடியாதவர்களுக்காக நாம் குரல் எழுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு துயர சம்பவங்கள் குறித்து நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். பாலின பேதம், நிறவெறி, குடிமக்கள் உரிமை, விலங்குகள் நலன் என நாம் பேசும் அனைத்து விஷயங்களும், நாம் அநீதிக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. முக்கியமாக ஒரே நாடு ஒரே மதம் என்பதை நாம் எதிர்க்கிறோம்.
இயற்கையுடனான பிணைப்பை நாம் இழந்துவிட்டோம். மனிதனை மையப்படுத்திதான் உலகம் இயங்குகிறது என எண்ணுவது குறித்து நாம் வருத்தப்பட வேண்டும். மனிதர்கள் படைப்பாற்றல் நிரம்பியவர்கள், புது விஷயங்களைக் கண்டறிய வல்லவர்கள். அன்பை முன்னிறுத்தி நாம் பிற உயிரினங்களுக்காகவும், சுற்றுசூழலுக்கும் உபயோகப்படும்படியான படிகளை முன்னெடுக்க வேண்டும்.