ஹாலிவுட், பாலிவுட் என அனைத்துவிதமான திரை நட்சத்திரங்களும் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் நடிகைகள் தங்களின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவர். எனவே இந்த சமூக வலைதள கணக்குகளை பின்பற்றுவதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும்.
ஆனால் ஒருசில நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களை விட்டு சற்று தள்ளியே இருப்பதும் உண்டு. அந்த வகையில் நீண்ட நாள்களாக இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்காமல் இருந்துவந்த ஹாலிவுட் நடிகை ஜென்னிஃபர் ஆனிஸ்டன் நேற்று புதிய கணக்கைத் தொடங்கினார். அவர் இந்தப் புதிய கணக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அவரைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியது.
ஜென்னிஃபர் ஆனிஸ்டன் இன்ஸ்டாகிராம் பக்கம் அதைத் தொடர்ந்து ஜெனிஃபர் ஆனிஸ்டன், இன்ஸ்டாகிராமில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான ஃபிரண்ட்ஸ் தொலைக்காட்சி தொடரில் தன்னுடன் நடித்த லிசா குட்ரோ, கோர்டனி காக்ஸ், மாட் லெப்னக், டேவிட் ஸ்விம்மர் மேத்யூ, பெர்ரி ஆகியோருடன் இணைந்து சமீபத்தில் எடுத்துக் கொண்ட படத்தை பதிவிட்டார். மேலும் அதில் இனி இன்ஸ்டாகிராமிலும் நாம் நண்பர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் பதிவிட்ட இந்தப் படத்தை ஹாலிவுட் திரை பிரபலங்கள், ரசிகர்கள் என எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்தனர். மேலும் தற்போதைய நிலவரப்படி இன்ஸ்டாகிராமில் ஜென்னிஃபரை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 75 லட்சத்தை நெருங்கியுள்ளது. ஜென்னிஃபரின் வருகையால் இன்ஸ்டாகிராம் வாசிகள் தற்போது மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது ஐம்பது வயது நிரம்பிய ஜென்னிஃபர் ஆனிஸ்டன் புரூஸ் ஆல்மைட்டி, வி ஆர் தி மில்லர்ஸ் போன்ற ஹாலிவுட் திரைப்படங்களிலும், நகைச்சுவை தொடர்களிலும் நடித்து பிரபலம் அடைந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.