புத்தக வாசிப்பாளர்கள், திரைத் துறையினர் தொடங்கி பெரும்பாலான தமிழ் மக்களால் பல ஆண்டுகளாக திரைப்பட வடிவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுவந்த ’பொன்னியின் செல்வன்’ புதினத்தை படமாக மணிரத்னம் இயக்கவுள்ள நிலையில், படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக்கப்பட்டு, படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.
தன் கனவுப்படமான இந்தப் படத்திற்காக வழக்கம்போல் தன் விருப்பத்திற்குரிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் மணிரத்னம் கைகோர்த்துள்ளார். அமிதாப் பச்சன், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் பச்சன், அமலா பால், பார்த்திபன், ஜெயராம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ரவியும் தற்போது இப்படக்குழுவில் இணைந்துள்ளார்.
சென்ற வருடம் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படமான ’டிக் டிக் டிக்’கில் தன் தந்தையுடன் அறிமுகமான ஆரவ் ரவி, தற்போது மீண்டும் பொன்னியின் செல்வனில் தன் தந்தையுடன் இணைந்து நடிக்கவுள்ளது சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.