அவதார்: புதிய அப்டேட்டை கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்! - ஜேம்ஸ் கேமரூனின் புதிய படம் அப்டேட்
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார் 2', 'அவதார் 3' படப்பிடிப்பு குறித்தான முக்கிய அப்டேட்டுகள் தற்போது வெளியாகியுள்ளது.

பண்டோரா என்கிற உலகத்தில் வாழ்பவர்கள், பூமியைச் சேர்ந்த மனிதர்களிடமிருந்து தங்கள் உலகைக் காக்கப் போராடும் கதையான அவதார் திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸில் பண்டோரா உலகம், அங்கு வாழும் மனிதர்கள், பிற விசித்திர உயிரினங்கள், அவர்களின் குணாதிசயங்கள் என இத்திரைப்படம் காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாகி, ரசிகர்களின் மனதை ஆட்கொண்டது.
தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அவதார் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. சில மாதங்களுக்கு முன், இரண்டாம் பாகத்தில் இடம்பெறவுள்ள 'பண்டோரா' உலகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக, உலகம் முழுவதும் நடைபெற்று வந்த அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் கரோனா தாக்கம் நன்கு குறைந்து விட்டதால் 'அவதார் 2' படப்பிடிப்பிற்காக தற்போது படக்குழுவினர் நியூசிலாந்தில் உள்ளனர்.
2020 ஆம் ஆண்டு ஆஸ்திரிய உலக உச்சி மாநாட்டிற்கு முன்னதாக அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கருடன் ஜூம் நேர்காணலின் போது 'அவதார் 2', 'அவதார் 3' படத்தின் புதிய அப்டேட்டை ஜேம்ஸ் கேமரூன் கொடுத்துள்ளார்.
அப்போது ஜேம்ஸ் கேமரூன் கூறியதாவது, "கரோனா தொற்று, எல்லோரையும் தாக்கியது போல எங்களையும் கடுமையாக தாக்கியது. கடந்த நான்கரை மாதங்களாக படத்தின் எந்த வித படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. இதன் காரணமாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் வெளியிட இருந்த படத்திற்காக நாங்கள் இன்னும் ஒரு வருடம் முழுமையாக உழைக்கவேண்டும்.
ஜூன் மாதம் நியூசிலாந்தில் கரோனா தொற்று இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே நாங்கள் இப்போது இங்கு படப்பிடிப்பைத் தொடங்கி உள்ளோம். அவதார் 2 படத்தின் 100 விழுக்காடு படப்பிடிப்பு முழுமை அடைந்துள்ளது. அவதார் 3 படத்தின் படப்பிடிப்பில் 95 விழுக்காடுகள் நிறைவடைந்துள்ளது.
'அவதார் 2' முதலில் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது இப்படம் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும்" என்றார்.
சாம் வொர்திங்டன், ஜோயி சல்டனா உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் இதிலும் இடம்பெற்றுள்ள நிலையில், கேட் வின்ஸ்லெட், வின் டீசல் உள்ளிட்ட புதிய நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.