முன்னாள் காவல் துறை அலுவலர் மோத்தி முகமது புது முகங்களை வைத்து இயக்கி உள்ள படம் கோலா. காவல் துறை அலுவலராக மோத்தி பணியற்றியபோது அவர் சந்தித்த உண்மை சம்பவங்களையும், கஞ்சா பயன்பாட்டால் இளைய தலைமுறையினர் எந்த அளவிற்கு சீரழிகின்றனர் என்பதை படமாக்கி உள்ளார்.
இப்படத்தின் இசை, ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாக்யராஜ், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஜாக்குவார் தங்கம், ”கஞ்சாவை ஒழிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படத்திற்கு முதலில் எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி நரம்புத் தளர்ச்சியால் கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் .
கோலா இசை வெளியிட்டு விழாவில் பேசிய ஜாகுவார் தங்கம் வாழ வேண்டிய வயதில் இப்போது இறக்கின்றனர். இது இளைஞர் சமூகத்திற்கு பெரும் அவலத்தை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா பயன்படுத்தும் போது மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே செய்துவிடுகின்றனர். கொலை செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் அதை அப்படியே செய்து விடுகின்றனர்.
ஒரு சிலர் சம்பாதிப்பதற்காக பல கோடி மக்களின் வாழ்கையை சீரழிக்கின்றனர். இது போன்ற ஆபத்தான பொருட்களை விற்பவர்கள் மீது அரபு நாடுகளில் வழங்கப்படுவது போல் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் இது பேன்ற குற்றவாளிகளை சட்டப்படி தண்டிப்பதைவிட மக்களே தண்டிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும்” என்றார்.