ஒவ்வொறு பிரகாசமான கண்களுக்குப் பின்னும் பல நூறு போராட்டங்களும், விடாமுயற்சியும் இருக்கும் என்பார்கள். அப்படி பலப் போராட்டங்களை எதிர்கொண்டு தான் எதிர்காலத்தில் சினிமாவிலும் அரசியலிலும் பெயர் எடுக்கப்போவதை அவர் சற்றும் நினைத்துக்கூடப் பார்த்திருக்கமாட்டார்.
சில நேரங்களில் அனுபவமும், சூழ்நிலையும்தான் ஒருவரின் வாழ்க்கையை எதிர்பாராத விதமாக வடிவமைக்கும். அப்படியோர் வாழ்வின் உதாரணம் தான் ஜெயலலிதாவின் வாழ்க்கை. அவரது காலத்தில் பெயர் பெற்ற நடிகையாய் மட்டுமல்லாது, ஒரு சிறந்த முதலமைச்சருக்கான பொறுப்பையும் ஜெயலலிதா எடுத்துக்கொண்டார்.
ஒரு காலத்தில் கொடூரமான இந்தச் சமுகத்தைப் பார்த்து, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்த அந்தச் சிறுமிதான், பிற்காலத்தில் திறமையான முதலமைச்சராக தன்னை உலகிற்கு தனித்துக் காட்டினார், ஜெயலலிதா. மேலும் சட்டப்பேரவையில் நுழையும்போது ஆளும் கட்சியினர் முன்பாக அவமதிக்கப்படும்போதும் ஊடகங்களுக்கு முன்பாக புன்சிரிப்பைக் காட்டி, வலிமையோடு நின்றார்.
காலம் செல்ல செல்ல வயதான அவர் தன் வலிமையைக் கூட்டிக்கொண்டே சென்றார். மக்கள் திடகாத்திரமான இரும்புக்கரங்களை மட்டுமே கண்டனர். 14 ஆண்டுகள் தன் வலிமையால் தமிழ்நாட்டைக் கட்டிப்போட்டார் ஜெயலலிதா. அவர் மேல் ஊழல் வழக்குகளும் குவியத் தொடங்கின.