'என் இனிய தமிழ் மக்களே' என்ற குரலுடன் திரையில் கும்பிடுபோட்ட கைகளுடன் பார்க்கும் போது தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் பாரதிராஜா கொண்டுள்ள காதல் பாமரனுக்கும் எளிதாக விளங்கும்.
சிறு வயது முதல் கிராமத்துடன் தனது வாழ்வை ரசித்து வாழ்ந்த இவரால் திரையில் கிராமத்தை அழகாக காட்சிப்படுத்த முடிந்தது. கிராமத்து வாழ்வைப் பிரதிபலிக்க அவருக்கு இயல்பான மனிதர்கள் தேவைப்பட்டதால், அவர் தனது ஒவ்வொரு படத்திலும் புதுமுகங்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
'16 வயதினிலே' படத்தில் இவர் புகுத்திய கதாபாத்திரங்களான சப்பாணி, பரட்டை, மயில் இவரைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 'விஷூவல் ட்ரீட்' ரசிகர்களின் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து, தனது கேமிராவால் கிழக்கே போகும் ரயிலையும், யதார்த்த சூரியனையும் படம் பிடிக்க ஆரம்பித்தார். நாவிதனின் மகனும் கவிஞன் என்னும் ஒற்றை வரியை அழகாக விவரித்த இப்படம், புதுமுகங்களாக இருந்தாலும், அவரது முதல் படத்தைக் காட்டிலும், அதிக நாள் திரையரங்கில் ஓடியது.
சினிமாவில் பிரபலங்களை வைத்து படம் இயக்கினால் மட்டுமே வெற்றி என்கிற பிம்பத்தை உடைத்தவர் பாரதிராஜா. தான் பள்ளிப்பருவத்தில் டெண்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்தபோது, அருகிலிருந்த அசலான மனிதர்களையே, இவர் படத்தின் கதைக்குத் தேவையான கதாபாத்திரங்களை தேடித்தேடி பயன்படுத்தினார்.
முதல் இரண்டு படங்களை கிராமியப் பிண்ணணியில் கொடுத்த இவர், நகரத்தின் பின்னணியில் வித்தியாசமான இளைஞனாக, 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் சப்பாணி கமலை நவ நாகரிக இளைஞனாகவும், வித்தியாசமான மேனரிசங்களில் காட்சிப்படுத்தியிருப்பார்.
மனதில் தோன்றுவதை அப்படியே திரையில் வெளிப்படுத்துவர் இயக்குநர் பாரதிராஜா. அது, 'ரைட்டா; தப்பா' என யோசிக்க மாட்டார். இதை அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்திருப்பார்.
அதில், ' நான் ஒரு மாட்டு இடையன் வாசிக்கும் புல்லாங்குழல் இசை மாதிரி.
எனது இசையைக் கேட்டு நல்லா இருக்குன்னு சொன்ன சந்தோஷம்; மாறாக, இது என்ன ராகம்னு கேட்டா எனக்குத் தெரியாது', அது மாதிரி தான் என் படத்தை மக்கள் ஏத்துக்கிட்டா ஓகே.
இல்லைன்னா, அவங்களுக்கு அது பிடிக்கலேன்னு நினைச்சுப்பேன், அதை அனலைஸ் பண்ண தெரியாது எனக்கு' எனக் கூறியிருந்தார். வேலையில்லாத் திண்டாட்டம், தீண்டாமை, சாதிய மோதல்கள், பெண் சிசுக் கொலை போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கும் படங்களையும் இயக்கிய பாரதிராஜா, மகளிர் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கைகள், சமூக விழுமியங்கள் ஆகியவற்றை வலியுறுத்தும் படங்களையும், மனித உறவுகளையும் மகிமைப்படுத்தும் படங்களையும் இயக்கியதோடு, தென்னிந்தியாவின் தனிப் பெரும் இயக்குநராகவும் விளங்கிவருகிறார்.
ஊர் நாட்டாமை பெருசுக்கும், பரிசல் குயிலுக்கும் இடையேயான காதல் கதை 'முதல் மரியாதை'. சிவாஜி கணேசன் திரையில் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லையென்ற நிலையில், இது அவருக்கு புதியப் பரிமாணத்தைத் தந்தது.
இளமையான வயதில் மட்டும் காதல் வருவதில்லை. நடுத்தர வயதைக் கடந்தோருக்கும் காதல் வரும் என ரசிகர்களுக்குப் பளீச் என சென்னவர் இயக்குநர் இமயம். இப்படி நடுவயதினருக்கு முதல் மரியாதை கொடுத்த பாரதிராஜா, இளைஞர்களை 'அலைகள் ஒய்வதில்லை' படத்தை இயக்கி கவர்ந்தார்.