தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் 2017ஆம் ஆண்டு கருப்பு ராஜா வெள்ளை ராஜா படத்தை தயாரிப்பதாக அறிவித்தார். விஷால், கார்த்தி, சாயிஷா ஆகியோர் நடிப்பில் உருவான இப்படத்தை பிரபு தேவா இயக்கிவந்தார். படத்தின் பணிகள் தொடங்கி ஒரு வாரம் நடைபெற்றது. இசையமைப்பாளராக ஒப்பந்தமான ஹாரிஷ் ஜெயராஜ் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்தார்.
பின்பு திடீரென்று படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு, படம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால் அதற்கான காரணத்தை படத்தின் தயாரிப்பாளர் வெளியிடாமல் ரகசியம் காத்துவந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரிடம் நடிகர் சங்கக் கட்டடம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், "கார்த்தி, விஷால் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தனர். அப்படத்தில் வரும் லாபத்தை வைத்து நடிகர் சங்க கட்டடம் கட்ட ஒப்புக்கொண்டனர்.
பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கி வெறும் ஒருவாரம் மட்டுமே நடந்தது. அதற்கு பிறகு விஷால் படப்பிடிப்புக்கு வரவேயில்லை. அவர் அப்போதே படத்தை நடித்து கொடுத்து இருந்தால், நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். ஒரு வருடமாக கட்டடம் சம்மந்தமாக எந்த வேலையும் நடக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படம் கைவிடப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: என்னது அடுத்த மாதம் கோலிவுட்டில் இத்தனை படங்கள் வெளியாகிறதா?