'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய த்ரில்லர் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படம் விக்ரமுக்கு 58ஆவது படமாகும். தற்காலிகமாக இப்படத்திற்கு '#விக்ரம்58' என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் பத்துக்கும் மேற்பட்ட கெட் அப்களில் விக்ரம் வருவதால், அவரது மேக்-அப்பில் தனிக்கவனம் செலுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ - வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
சமீபத்தில் இந்தப் படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஸ்டைலிஷான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக அறிவித்தனர்.
தற்போது, இர்பான் பதான் #விக்ரம்58 படம் குறித்த முக்கியத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், 'வணக்கம் மக்களே...நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதல் ஷெடியூல் நல்ல படியா முடிஞ்சாச்சு...மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting" ' - என தமிழில் ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் கொண்டாடியும் அதிகமாக பகிர்ந்தும் வருகின்றனர்.
முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ஹன்சிகா நடிக்கும் திகில் கலந்த நகைச்சுவைப் படத்தில் வில்லனாகவும், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிகர் சந்தானம் நடிக்கும் 'டிக்கிலோனா' என்ற படத்திலும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிங்க: மஜா பண்ண ரெடி... அன்பான புள்ளைங்களுக்கு இர்பான் பதான் தமிழில் ட்வீட்