கரோனா தொற்றுக்கு பவன்கல்யாண் அளித்த நிதியுதவியால் ஈர்க்கப்பட்டு நடிகர் ராம்சாரணும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700ஐ நெருங்குகிறது. இதனிடையே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு உத்தரவால் தினக்கூலிகள், ஆதரவற்றோர், அடிதட்டு மக்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில் சினிமா நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைப் போக்கும்வகையில், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயும், ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
இவரின் இந்த செயலால் ஈரக்கப்பட்ட அவரது உறவினரும் நடிகருமான ராம்சரண் தற்போது 70 லட்சம் ரூபாயை கரோனாவுக்காக தெலங்கானா ஆந்திரா முதலமைச்சர் நிவாரணநிதிக்கு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ராம்சாரண் தனது ட்விட்டர் பக்கத்தில், பவன்கல்யாணின் செயலால் ஈர்க்கப்பட்டு இந்த நெருக்கடி தருணத்தில் தெலங்கானா, ஆந்திர மாநில அரசங்கத்திற்கு உறுதுணையாக இருக்கவிரும்புகிறேன். இதற்காக அந்த மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு ரூ. 70 இலட்சத்தை வழங்குகிறேன்.
உலகப் பெருந்தொற்றான கரோனாவை இந்தியாவில் கட்டுபடுத்த இந்திய பிரதமர் மோடி, தெலங்கானா, ஆந்திரா முதலமைச்சர்களின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக தற்போது உள்ள தேசிய ஊரடங்கு உத்தரவை அனைவரும் மதித்து பின்பற்று வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த் என்று பதிவிட்டுள்ளார்.