பாலிவுட்டில் அமிதாப் பச்சன், ஆயுஷ்மன் குரானா நடிப்பில் உருவான 'குலோபோ சிதாபோ', வித்யா பாலனின் நடிப்பில் உருவான 'சகுந்தலா தேவி', தமிழில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' உள்ளிட்ட பல திரைப்படங்கள் டிஜிட்டல் தளமான OTTயில் விரைவில் வெளியாக உள்ளன. அதேபோல் பல திரைப்படத்தின் படக்குழுவினரும் தங்களது படங்களை OTTயில் வெளியிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இது குறித்து திரைப்பட உரிமையாளர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் ஐநாக்ஸ் குழுமம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "தங்கள் படத்தை திரையரங்கில் வெளியிடாமல் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து ஒரு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பற்றி ஐநாக்ஸ் நிறுவனம் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்த விரும்புகிறது. அந்த அறிவிப்பு உலகளாவிய திரைப்பட வெளியிடலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி.
திரைப்படத் தாயாரிப்பாளர்களுக்கும் திரையரங்களுக்கும் எப்போதும் ஒரு பரஸ்பர புரிதல் இருந்தே வந்துள்ளது. இதில் ஒருவருடைய நடவடிக்கைதான் இன்னொருவரது வருவாய்க்கு வழிவகுக்கும். நல்ல படங்கள் அதிகமாக வரவேண்டும், என்பதற்காக நாடு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த திரைகளை ஐநாக்ஸ் நிறுவியுள்ளது. பல்லாண்டு காலமாக நீடித்து வரும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் உதவி வந்துள்ளது. ஒருவரோடு ஒருவர் தோள் கொடுத்து திரைத்துறையை மீட்டெடுக்க வேண்டிய இந்த நேரத்தில் சில பங்குதாரர்கள் இந்த பரஸ்பர உறவுமுறையில் ஆர்வமில்லாமல் செயல்படுவது வருத்தமாக உள்ளது.