இயக்குநர்கள் மணிரத்னமும், யூப் சினிமாஸும் இணைந்து தயாரித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம், 'நவரசா'. அதில் பயத்தின் உணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'இன்மை' படத்தை, இயக்குநர் ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார்.
சித்தார்த் இதில் நாயகனாக நடித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகும் இப்படம் கரோனாவால் பாதித்த திரைத்துறைத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்மை என்றால் என்ன?
இதுகுறித்து நடிகர் சித்தார்த் கூறியதாவது, "மணிரத்னம், ஜெயேந்திரா எனக்கு 'இன்மை' படத்தில் வாய்ப்பு வழங்கியபோது, நான் மிகமிக மகிழ்ச்சியடைந்தேன். நவரசங்களில் ஒரு உணர்வைக் குறிக்கும் இன்மை என்பதின் அர்த்தம், பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதாகும்.
'இன்மை' என்ற வார்த்தையைக் கேட்கும்போதே மக்களின் ஆர்வம் அதிகரிக்கும். கரோனாவால் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள, திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் ஒரு முன்னெடுப்பாக, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.