ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு, தன் நாட்டில் சிறந்த முதலீட்டாளர்கள், பிசினஸ்மேன்களுக்கு 10 ஆண்டுகள் செல்லுபடியாகக்கூடிய கெளரவ விசாவான கோல்டன் விசாவை வழங்குகிறது.
இந்த கோல்டன் விசா 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவைப் பெற்றவர்கள், பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது.
இந்த விசாவை வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமகன்கள் போலவே கெளரவமாக நடத்தப்படுவார்கள்.
தங்கள் நாட்டில் தொடர்ந்து முதலீட்டை அதிகரிக்கவும்; அவ்வாறு முதலீடு செய்யும் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தவும் அமீரக அரசு இத்தகைய நடைமுறையை மேற்கொண்டு வருகிறது.
முதலில் தொழில்துறையைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கோல்டன் விசா, தற்போது பொழுதுபோக்கு உள்பட மேலும் சில துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கி, அமீரக அரசு கெளரவித்து வருகிறது.
மலையாளிகளைக் கொண்டாடும் அமீரக அரசு
அதன்படி மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், டொவினோ தாமஸ், பிரித்விராஜ் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் சஞ்சய் தத், ஷாருக்கான் உள்ளிட்ட நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்முறையாகப் பிரபல பின்னணிப் பாடகி சித்ராவிற்கு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கியுள்ளது. இதுகுறித்து சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், " இன்று காலை ஹெச்.இ.மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மாரியிடமிருந்து, யுஏஇ கோல்டன் விசா பெறும் பாக்கியம் கிடைத்தது. இது மிகவும் பெருமையாக உள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: துல்கர் சல்மானுக்கு கோல்டன் விசா