மும்பையைச் சேர்ந்த முமைத் கான், குடும்ப வருமை காரணமாகத் தனது 13ஆவது வயதில் சினிமாவிற்குள் நுழைந்தார். சிறுவயது முதல் நடனத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர், இந்தி படங்களில் குருப் டான்சராக நடனமாட ஆரம்பித்தார். அப்பாவின் வேலை ஓய்விற்குப் பிறகு குடும்ப வறுமை இவர் தலையில் விழுந்த நிலையில், தனது பள்ளி படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டு நடனத்தில் தனது கவனத்தைச் செலுத்தினார்.
இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடா, பெங்காலி, ஒடியா, இந்தி ஆகிய மொழி படங்களில் நடனமாட ஆரம்பித்தார். இவர் படங்களில் நடனமாடுவது மட்டுமின்றி தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசனிலும் கலந்துக் கொண்டார்.
இவர் தமிழில் வேட்டையாடு விளையாடு படத்தில் உள்ள ’நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே ’ பாடல், கந்தசாமி படத்தில் 'என் பேரு மீனாகுமாரி', போக்கிரியில், 'என் செல்லப்பேரு ஆப்பிள்', வில்லு படத்தில் 'டாடி மம்மி வீட்டில் இல்ல' உள்ளிட்ட பாடல்களில் நடனமாடி கோலிவுட் ரசிகர்கள் மனதில் எளிதாக இடம்பிடித்தார். இவர் தமிழில் கடைசியாக ’ஆர்யா சூர்யா’ படத்தில் நடனமாடி இருந்தார்.
ஏன் பேரு மீனாகுமாரி என் ஊரு கன்னியாகுமரி இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தூக்கத்தில், படுக்கையிலிருந்து கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டு, கோமா நிலைக்குச் சென்றார். இதனையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோமாவில் இருந்து திரும்பிய அவர் மீண்டும் படங்களில் நடனமாடுவதைத் தொடங்கினார்.
பல்வேறு படங்களில் குத்துப் பாடல்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த முமைத் கான் இன்று (செப் 1) தனது 35ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். இதனையொட்டி சமூக வலைதளங்களில் #HBD முமைத் கான் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.