கடந்த ஆண்டு விஜய் நடிப்பில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த பிகில் திரைப்படத்தின் வசூலை குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், வருமான வரிதுறையினர் சென்னையில் உள்ள ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகம், ஃபைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், இப்படத்தில் நடித்த நடிகர் விஜய்யின் வீடு மற்றும் மதுரையில் உள்ள அன்புச்செழியனின் நண்பர் சரவணணின் அலுவலகம் என மொத்தம் 38 இடங்களில் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சோதனைக் குறித்து வருமான வரித்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், ஆவணங்கள், காசோலைகள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில் பிகில் படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததில் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.