வைகைப்புயல் வடிவேலு தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாவார். அவருடைய நகைச்சுவை இல்லாத மீம்ஸ்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்றே கூறலாம். வடிவேலு நடித்து சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை வைத்து அதன் இரண்டாம் பாகத்தை 2017இல் எடுக்க இயக்குநர் சிம்பு தேவன், ஷங்கர் முடிவு செய்தனர். படத்திற்கு ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்று தலைப்பு வைத்து வடிவேலுவையே மீண்டும் நாயகனாக நடிக்க ஒப்பந்தமும் செய்தனர். படம் தொடங்கிய சில நாட்களிலேயே வடிவேலுவுக்கும் சிம்புதேவனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்திலிருந்து வடிவேலு விலகிவிட்டார். இதனையடுத்து பட வேலைகளும் நிறுத்திவைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்ததால் வடிவேலுக்கு வேறு எந்த படங்களிலும் வாய்ப்பில்லாமல் போனது. சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலு 'கத்தி சண்ட', 'மெர்சல்' ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இந்தநிலையில், இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கம், ஷங்கர் - வடிவேலு இடையே பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்த சுமுக முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் தற்போது ஷங்கர் - வடிவேலு இருவரிடமும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசி வருகிறார். இந்த பேச்சு வார்த்தை தற்போது சுமுகமாக முடிவடைந்துள்ளதாகவும், தன்னால் ஏற்பட்ட நஷ்டத்தை வடிவேலு ஷங்கருக்கு வழங்க சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'இம்சை அரசனை இயக்கியவருக்கு' 41ஆம் பிறந்தநாள்