இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 2ஆம் தேதி சென்னையில் மாபெரும் இசை விழா நடைபெற உள்ளது. ’இசை கொண்டாடும் இசை’ என்ற தலைப்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி பூந்தமல்லியில் உள்ள பிவிஆர் பிலிம் சிட்டியில் இரண்டாம் தேதி மாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் விதமாக டபுள் டக்கர் பஸ் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது . அதில் இளையராஜாவின் இசை பயணத்தில் தவிர்க்க முடியாத புகைப்படங்கள் காட்சிப்படுத்தபட்டுள்ளது. இந்த பேருந்து சென்னை முழுவதும் வலம் வரவுள்ளது. இந்த பேருந்தை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பில் பேசிய இளையராஜா,பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் பிறந்த நாள் என்பது வாழ்க்கையில் ஒருமுறைதான் வரும், அது நிகழ்ந்துவிட்டது, இருப்பினும் என் பிறந்தநாள் கல்லூரிகளிலும் பல நிகழ்ச்சிகளிலும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதை நான் ஆமோதித்துக் கொள்கிறேன் ஏனென்றால் நான் சமூகத்துடன் ஒன்றுபட்டு வாழ்கிறேன் என்பதற்காக அதை ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
மேலும் அவர், வருடம் முழுவதும் ஒரு நபருக்கு பிறந்த நாள் கொண்டாடியது எனது 75ஆவது ஆண்டு பிறந்தநாள்தான். வரும் ஜூன் இரண்டாம் தேதி எனது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அந்நிகழ்வில் மாபெரும் இசைக் கச்சேரி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் அந்த இசைக் கச்சேரியில் சுமார் 100 கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைக்க உள்ளனர், இது பொது மக்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
இளையராஜா டபுள் டக்கர் பஸ் இந்த இசைக் கச்சேரியின் மூலம் வரும் நிதி, திரை இசை கலைஞர்களின் நல்வாழ்விற்கு பயன்படுத்தப்படும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ் உள்ளிட்ட பல பாடகர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். இதுவரை இளையராஜா நடத்திய நிகழ்ச்சியில் இது மாறுபட்டதாக இருக்கும். திரைப்படத்தில் பின்னணி இசை எந்த அளவுக்கு உதவும் என்பதை இந்நிகழ்ச்சியில் நேரில் இசையமைத்து காட்டவுள்ளேன் என்றார்.
மேலும் அவர், திரை இசை கலைஞர் சங்கத்திற்கு தனிப்பட்ட முறையில் உதவிகள் செய்ய திட்டமிட்டுள்ளேன். அந்த உதவி என்பது மக்களிடம் இருந்து வசூல் செய்யப்படும் பணத்தில் செய்வதல்ல, என் சொந்த செலவில் செய்ய இருக்கிறேன் என்றார்.