தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தியானம் செய்ய இளையராஜாவுக்கு ஏன் அனுமதி அளிக்கக்கூடாது?

சென்னை: பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்து கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை ஏன் அனுமதிக்கக்கூடாது என பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Dec 18, 2020, 2:54 PM IST

Ilayaraja ask one day permission for doing meditation in prasath lab, notice served, MHC
Ilayaraja ask one day permission for doing meditation in prasath lab, notice served, MHC

இளையராஜா-பிரசாத் ஸ்டுடியோ விவகாரம்

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவின் ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக தன்னுடைய ரெக்கார்டிங் தியேட்டராக பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அவ்விடத்தை வேறு தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து, இளையராஜாவை அந்த இடத்திலிருந்து காலி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

நீதிமன்றத்தில் வழக்கு

இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது தொடர்பான வழக்கு தற்போது சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ” தான் இத்தனை ஆண்டுகள் இசையமைத்த அந்த ஸ்டுடியோவுக்கு ஒரு நாள் சென்று தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அங்கு தான் கைப்பட எழுதி வைத்துள்ள இசைக் கோப்புகள், இசைக் கருவிகள், தனக்கு கிடைத்த விருதுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதற்கு ஸ்டுடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் “ எனக் கோரி இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இளையராஜாவின் உடைமைகள்

இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, பிரசாத் ஸ்டுடியோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், அப்துல் சலீம் ஆகியோர், ” ஸ்டுடியோ இருந்த இடத்தில் தற்போது மென்பொருள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இளையராஜாவின் உடைமைகள் அனைத்தும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. அவர் எப்போது வேண்டுமானாலும் அதனை எடுத்து கொள்ளலாம் ” என்றனர். இருப்பினும், அவரை தியானம் செய்ய அனுமதிப்பது குறித்து ஸ்டுடியோ நிர்வாகத்திடம் கேட்டு தெரிவிப்பதாகவும் கூறினர்.

ஸ்டுடியோவில் தியானம் செய்ய அனுமதி?

எதிரியையும் உபசரிக்கும் பண்பு கொண்ட தமிழ் மண்ணில், ஸ்டுடியோ இடத்தில் இளையராஜாவிற்கு உரிமை உள்ளதா? இல்லையா? என்பதை தாண்டி மனிதாபிமான அடிப்படையிலும், நீண்ட நாள் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இசையமைப்பாளர் இளையராஜாவை ஒரு நாள் தியானம் செய்ய ஏன் அனுமதிக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அது குறித்து ஸ்டுடியோ நிர்வாகத்திடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: இளையராஜாவை வெளியேற்றிய வழக்கு: பிரசாத் ஸ்டூடியோ பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details