திரைத்துறையில் பல வெற்றி பாடல்களை கொடுத்து இசைஞானியாக இருப்பவர் இளையராஜா. ஒரு காலகட்டத்தில் இவரது பாடலுக்கென்றே படங்கள் ஓடியது என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்படி புகழின் உச்சத்திலிருந்த இளையராஜா தனக்கு என்று தனியாக ஒரு ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைத்துக் கொள்ளவில்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு பிரசாத் ஸ்டுடியோவின் நிறுவனரான எல்.வி.பிரசாத் சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தனது ஸ்டுடியோவில் உள்ள ஒரு கட்டடத்தை இளையராஜாவிடம் வாடகைக்கு பயன்படுத்திக் கொள்வதற்காக கொடுத்தார். அந்த ஸ்டுடியோவையே இளையராஜா தனது ரெக்கார்டிங் பணிகளுக்காக பயன்படுத்திவந்தார்.
இளையராஜா புகழின் உச்சியில் இருந்தபோது இசையமைத்த அனைத்து பாடல்களுமே பிரசாத் டீலக்ஸ் ரெக்கார்டிங் தியேட்டரில்தான் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக இசை பணி செய்துவரும் இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டுடியோ பக்தி கலந்த உணர்வுபூர்வமான இடமாகவே இருந்தது.
இதனிடையே, பிரசாத் ஸ்டுடியோவில் உள்கட்டமைப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாகவும் இடத்தை காலி செய்யுமாறும் இளையராஜாவிற்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தினமும் காலை முதல் மாலை வரை பிரசாத் ஸ்டுடியோவில் இசை பணி செய்யும் இளையராஜா கடந்த ஒரு சில தினங்களாக பிரசாத் ஸ்டுடியோவிற்கு வரவில்லை என கூறப்படுகிறது.