இளையராஜா இந்த பெயரைத் தாண்டி இரவும் கிடையாது. பயணமும் கிடையாது. பண்ணைபுரத்து பாசக்காரன். இந்த சமூகம் இசைக்கு காலங்காலமாக கட்டமைத்ததை, மண்ணின் இசையால் உடைத்து சுக்கு நூறாக்கியவர் ராஜா. ஏகாந்தத்தில் துணையாக இருப்பவர். வயல்களிலும், களத்துமேடுகளிலும் களைப்பைத் தீர்க்க கிராமத்து இசைவாணிகள் பாடிய மெட்டுக்களை, திரையிசையில் ஏற்றி அழகு பார்த்தவர். திரை இசைக்கும் எளிய மனிதனுக்கும் உள்ள இடைவெளியை குறைத்தவர். பிறப்பு முதல் இறப்பு வரையில் அனைவரின் வாழ்க்கையிலும் இசை வழியாக கலந்தவர்.
மகிழ்ச்சியில் தூக்கி செல்வார். சோகத்தில் தாய்மடி கொடுப்பார். ஏனெனில் அவர் ஒரு அற்புத மனிதன். ஆன்மீகம், காதல், காமம், கொண்டாட்டம், சோகம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளையும் இசை குறிப்பாளாக்கியவர். 'உனக்கு தேவையானதை எடுத்துக் கொள்..!' என்று சொல்லும் ஒற்றை இசை அகராதி அவர். மொழி தெரியாத இந்தி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த 1976 காலகட்டத்தில், 'அன்னக்கிளி' படத்தில் 'மச்சான பார்த்தீங்களா'... எனும் பாட்டு மூலம் ஒட்டுமொத்த இசையுலகத்தையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர்.
ஒவ்வொரு பாடல்களுக்கும், பின்னணி இசை மூலம் படத்திற்கும் உயிர் கொடுத்த தாயுமானவர். ராஜா ஒரு அனிச்சை அட்சயம். குள்ள உருவம்தான் நம்மை கொள்ளை அடித்து வைத்திருக்கிறது. இசையில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன. அத்தனை வகைகளையும் கலை கெடுக்காமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் பெரும் இசைப்புரட்சியை செய்த அன்னக்கிளியில் குயில் கூவ ஆரம்பித்தது அந்த குயில் இன்று வரை கூவுவதை நிறுத்தவே இல்லை.
மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா என எளிய மக்களின் வாழ்க்கையை பாசாங்கு இல்லாமல் படமாக்கும் இயக்குநர்களின் படங்களில் இளையராஜா கொடுத்த பாடல்களும், மெல்லிய உணர்வுகளை கடத்தும் பின்னணி இசையும் காலம் கடந்தும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. பாலுமகேந்திரா இயக்கிய 'வீடு' படத்தில், கட்டுமானத்தில் இருக்கும் புதிய வீட்டை முதியவர், சுவரை தடவிக் கொண்டு ஆனந்த பூரிப்புடன் சுற்றிப் பார்க்கும் வசனமில்லாத காட்சியில் புல்லாங்குழல், வயலின் மூலம் இளையராஜா கொடுத்த பின்னணி இசை ஒன்று மட்டும் போதும், அவர் பாடல்களில் மட்டுமல்ல... பின்னணி இசையிலும் ராஜா என்பதை நிரூபிப்பதற்கு. தாரை தப்பட்டை, பழசிராஜா ஆகிய படங்களுக்கு பின்னணி இசைக்காக இரண்டு தேசிய விருதுகளை கொடுத்து, மத்திய அரசு பெருமை தேடிக் கொண்டது.