நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. கடந்த வாரம் திரைக்கு வந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுவருகிறது. இந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திரசேகர், பேரரசு, ஆர்.பி. உதயகுமார், ஏ.எல். விஜய், ரவிமரியா, சீனு ராமசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு ஒத்த செருப்பு படம் குறித்து பாராட்டினர்.
ஒத்த செருப்பு - ‘தேசிய விருது வழங்கவில்லை என்றால் மத்திய அரசு மதிப்பற்று போகும்’ - ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது
’ஒத்த செருப்பு’ படத்துக்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால் மத்திய அரசு மதிப்பற்று போகும் என இயக்குநர் எஸ்.ஏ. சந்திகரசேகர் தெரிவித்துள்ளார்.
விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், ’இந்தப் படம் பார்த்தவுடன் இயக்குநர் பார்த்திபனுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தேன். இப்படி நான் வாழ்த்து தெரிவித்த நான்கு பேரில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். நான் இதுவரை 50-க்கும் மேற்பட்ட கமர்சியல் படங்களை இயக்கி உள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு படத்தை என்னால் இயக்க முடியாது. எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. பார்த்திபன் என்னிடத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்ததாக கூறினார். ஆனால் எனக்கு இந்த படத்தை பார்த்த பிறகு பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக உள்ளது. இந்தப் படத்திற்கு மத்திய அரசு விருது தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மதிப்பில்லை' என்றார்.