விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஜூன் 22ஆம் தேதி ரசிகர் ஒருவர், விஜய் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் படத்தை குறித்து விஜய் அந்த வீடியோவில் பேசியிருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் சேரன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பிரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்குப் பின் அவர் என்னோடு சேர்ந்து படம் பண்ணவும் ஒப்புக்கொண்டார். நான்தான் 'தவமாய் தவமிருந்து' படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.
அந்தத் தவறை நான் செய்திருக்கக்கூடாது. இந்தத் தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது உணர்கிறேன். இந்தத் தவறுக்கான வருத்தத்தை விஜய்யை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கிறேன். ஆனால், நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன்.
அவரிடம் 'ஆட்டோகிராஃப்' கதை சொன்ன மூன்று மணிநேரம் மறக்கமுடியாதது. ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி, என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்தத் தன்மை. வாவ்... கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான். அவ்வளவு டெடிகேஷன், அதுவே இன்று அவரின் உயரம்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை விஜயின் ரசிகர்கள் பலர் ரீட்வீட் செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:காவல்துறை மக்களை பாதுகாக்க அன்றி உயிரை பறிக்க அல்ல - இயக்குநர் சேரன்