கடந்த 2019ஆம் ஆண்டு பிரெஞ்சு இயக்குநர் ஜெரிமி கிலாப்பின் இயக்கத்தில் வெளியான அனிமேஷன் திரைப்படம் ’ஐ லாஸ்ட் மை பாடி’ (I lost my body). ஒருபக்கம் தன் உடம்பானது வெட்டப்பட்ட கையுடன் சேரத் துடிக்கும் பயணம். மறுபக்கம் அந்த கையின் உடலுக்கு சொந்தக்காரனான நௌபலின் கதை. இவ்விரண்டு கதைகளின் பிணைப்பே திரைக்கதை.
இந்தக் கை ஏன் வெட்டப்பட்டது? என்பது ஒருபக்கமும், மறுபக்கம், நௌபலின் இருத்தியல் நெருக்கடிகளும் மனத் தேடலைச் சொல்லும் கதையையும் ‘Non linear' முறையில் இயக்குநர் கையாண்டிருப்பார்.
ஒரு அனிமேஷன் திரைப்படம், இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவது மிக அரிதே. பொதுவான கண்ணோட்டத்தில் அனிமேஷன் திரைப்படங்களை குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்று சுருக்கும் போக்கு இருந்து வருகிறது. ஆனால், ஜெரிமிக்கு அதில் உடன்பாடில்லை.
'அனிமேஷன் என்பது நீங்கள் கதை சொல்லும் விதம் மட்டுமே, அதை தனி ஒரு 'Genre'ஆகப் பார்க்க அவசியம் இல்லை. கதையும், உணர்வும் மட்டுமே திரைப்படத்திற்கு மிக முக்கியம்' என்று ஜெரிமி ஒரு முறை கூறியிருக்கிறார்.
பகுதி 1 - வெட்டப்பட்ட கையின் தேடல்:
பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மடிக்கை அளவில் வெட்டப்பட்ட கை,அங்கிருந்து தப்பிக்க முயல்கிறது..!
முதலில் விரல்களை வைத்து மெல்ல மெல்ல நகர ஆரம்பித்து அதன்பின் விரல்களை வைத்தே ஓடும் பரிணாமத்தை சில நொடிகளில் அடைகிறது.
இவை அனைத்தும் கூறுசெய்யப்பட்ட இன்னொரு கண் விழி முன் நடக்கிறது..!
இப்படித்தான் நௌபலின் வெட்டப்பட்ட கையின் பயணம் ஆரம்பிக்கிறது. அங்கிருந்து வெளியேறும் கை, பாரிஸின் வாகனங்களுக்கு இடையே பல தரப்பட்ட மனிதர்களுக்கு இடையே தண்டவாளங்களுக்கு இடையே பல உயிரினங்களுக்கு இடையே பயணிக்கிறது.
பயணம் அவ்வளவு எளிதாக இல்லை. தன் இருத்தலைக் காத்துகொள்ளவும், தம் உடலுடன் சேரவும் அந்தச் சின்ன மடிக்கைக்கு அவ்வளவு சாகசங்களும், போராட்டங்களும் செய்ய வேண்டியிருந்தது.
பயணத்தில் அந்தக் கைக்கு தன் உடலின் நினைவுகளும்,ஏக்கங்களும் மேகங்களாய் கடந்து போக, அந்தக் கை தனது உடலை நோக்கிய தேடலில் இருந்தது.
ஒரு கையின் ஏக்கமும், உணர்வுகளும் இவ்வளவுப் பாதிப்பு தரும் என்று பார்வையாளர்கள் நிச்சயம் எதிர்பார்த்திருக்க முடியாது.
இந்தக் கையின் தேடல் காட்சிகளில் வசனங்கள் ஏதும் இருக்காது. டான் லெவியின் பின்னணி இசை வார்த்தைகளின்றி உணர்வுகளை விவரிக்கிறது. இந்தக் கை, அதன் உடலோடு எவ்வளவு நினைவுகளில் பகிர்ந்திருக்கிறது என்பதைக் காட்சிப்படுத்தியது இயக்குநரின் ’டச்’.
பகுதி 2 - வெட்டப்பட்ட மனதின் தேடல்:
இத்திரைப்படத்தில் மறுபக்கம் ‘Non linear' முறையில் பயணிக்கும் இந்தக் கைக்கு சொந்தக்காரனான நௌபலின் பயணம், பெரும்பான்மையான டீன் ஏஜ் இளைஞர்களின் பிரதிபலிப்பென்று கூட சொல்லலாம்.
பெரும் கவர்ச்சியற்றத் தோற்றம், சிறு வயதிலேயே அன்பையும் உறவையும் இழந்த மனம், பெரும்பாலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உருவக்கேலிகளுக்கும், கிண்டல் கொடுமைகளுக்கும் ஆளாகும் சராசரியான ஒரு டீன் ஏஜ் பையனின் கதாபாத்திரம்.
நௌபலின் இருத்தல் எண்ணங்கள் மிக பலவீனமாகவே ஆரம்பத்தில் இருக்கும். அவன் வாழ்வில் அவன் தேடுவது அல்லது ஏங்குவது அனைத்தும் அன்பிற்கே.