சென்னை: டெல்லியில் திங்கள்கிழமை (அக்.25) நடைபெறும் விழாவில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக்.24) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம். நான் இதை எதிர்பார்க்கவில்லை.
இந்தத் தருணத்தில் கே.பி. சார் (இயக்குனர் கே.பாலசந்தர்) இல்லையே என்ற வருத்தம் உள்ளது. விருது வாங்கிய பின்னர் மீண்டும் சந்திக்கிறேன்” என்றார்.
தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டபோது மணற்சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த ஒடிசா கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.
சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இது. இதற்கு முன்பு இந்த விருதைப் பெற்ற தமிழ் நடிகர் சிவாஜி கணேசன். ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான அமிதாப் பச்சனும் இந்த விருதை பெற்றுள்ளார்.
இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே பெயரிலான இந்த விருது, திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : ரஜினிகாந்திற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சத்யராஜ்