சென்னை: சந்தானம் நடிப்பில் உருவாகும் 'டிக்கிலோனா' படத்தில் நடிக்கும் நடிகர்களின் விவரங்களை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர் பேக்டரி சார்பில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 'டிக்கிலோனா'. முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார்.
சந்தானத்தோடு, இந்திய அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகை அனகா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலம் அறிமுகமான ஷிரின் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
எனர்ஜிடிக் காமெடியன் யோகிபாபு, வில்லத்தன காமெடியால் அசத்தும் ஆனந்த்ராஜ், குணச்சித்திரம் காமெடி முனிஷ்காந்த், நிழல்கள் ரவி, சித்ரா லட்சுமணன், மொட்டை ராஜேந்திரன், ஷாரா, நிழல்கள் ரவி, யூ ட்யூப் ரிவீவர் பிரசாந்த் என படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் இணைந்த நட்சத்திரங்கள் படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமும் மிகச்சிறந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது நிலையில் படத்தின் ஷுட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. படத்தில் ஹீரோ, வில்லன், காமெடியன் என சந்தானம் நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.
சயின்ஸ் பிக்ஷன் பாணியில் படத்தின் கதை அமைந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், வரும் 2020 ஏப்ரலில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனராம்.
ஏராளமான படங்களில் காமெடியில் கலக்கிய கவுண்டமணி - செந்தில் ஆகியோர் நடித்த ஜென்டில்மேன் படத்தின் நகைச்சுவை காட்சி ஒன்றில் டிக்கிலோனா என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தும் செந்தில், அதன் மூலம் காமெடி செய்திருப்பார். தற்போது அந்தக் காமெடியை நினைவுபடுத்தும்விதமாக அமைந்திருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு, படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.