தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வான இரண்டு தமிழ்ப் படங்கள் - கோவா திரைப்பட விழாவில் ஹவுஸ் ஓனர்

உலக அளவில் புகழ்பெற்ற கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு இரண்டு தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன. இந்திய சினிமாக்களை உலக அளவில் அங்கீகரிக்கும் இந்த விழா பொன்விழா ஆண்டில் அடியெடுத்துள்ளது.

ஹவுஸ் ஒன்ர் மற்றும் ஒத்த செருப்பு சைஸ் 7

By

Published : Oct 10, 2019, 11:48 AM IST

சென்னை: ஐ.எஃப்.எஃப்.ஐ. (IFFI) என்று கூறப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிட 'ஒத்த செருப்பு சைஸ் 7', 'ஹவுஸ் ஓனர்' ஆகிய இரு படங்கள் தேர்வாகியுள்ளன.

50ஆவது கோவா சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்திய அளவில் தயாராகும் அனைத்து மொழிகளிலிருந்து படங்கள் தேர்வுசெய்யப்பட்டு இதில் திரையிடப்படவுள்ளன.

இந்த நிலையில், ஒற்றை ஆளாக பார்த்திபன் காட்டிய 'ஒத்த செருப்பு சைஸ் 7', சென்னை வெள்ளத்தின்போது இரண்டு வயது முதிர்ந்தவர்களுக்கான அழகான காதலை உணர்ச்சிப்பூர்வமாகக் கூறிய 'ஹவுஸ் ஓனர்' ஆகிய படங்கள் கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளன.

மொத்தம் 26 படங்கள் தேர்வுசெய்யப்பட்டு அதிலிருந்து இந்த இரண்டு படங்களும் தேர்வாகியுள்ளன. இது குறித்து 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளருமான பார்த்திபன் கூறியதாவது, எனது முயற்சிக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை ஜூரி உறுப்பினர்கள் தேர்வு செய்ததற்கு தலைவணங்குகிறேன்.

இதன்மூலம் இந்தப் படம் உலக அளவில் கவனத்தை பெற சிறந்த நுழைவு வாயிலாக இருக்கப்போகிறது. அதுவும் 50ஆவது ஆண்டு திரைப்பட விழாவில் திரையிட இருப்பது இன்னும் சிறப்பு.

இந்தப் படத்தில் ஒற்றை ஆளின் நடிப்புத் திறமை திரையில் தென்பட்டாலும், இதற்கு பின்னணியில் பலபேரின் கடின உழைப்பு உள்ளது. சந்தோஷ் நாரயணன் இசை, சத்யா பின்னணி இசை, ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைன், ராம்ஜி ஒளிப்பதிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் படத்தை சிறப்பானதாக மாற்றியுள்ளது என்றார்.

இதைத்தொடர்ந்து 'ஹவுஸ் ஓனர்' படம் கோவா திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது குறித்து அந்தப் படத்தின் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டரில், நான் இதுபற்றி செய்தி கேள்விப்பட்ட நாளிலிருந்து நான்கு நாள்கள் தூங்கவில்லை. அந்த அளவுக்கு ஆர்வத்தில் இருந்தேன். இந்தியா முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற இயக்குநர்களின் படங்கள் திரையிடப்படும். மதிப்புமிக்க திரைப்பட விழாவில் 'ஹவுஸ் ஓனர்' திரையிடுவது மிகப்பெரிய விஷயமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details