வலிமை
போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலம் நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கரோனா பரவல் காரணமாக திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், இரவு நேர ஊரடங்கு போன்ற காரணங்களால் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் இப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் அஜித் ரசிகர்கள் உள்ளனர். தங்களது விருப்பமான நடிகரைத் திரையில் பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் உள்ளனர். வலிமை எப்போது வெளியானாலும் வெற்றிபெறுவது உறுதி என்றும் அவர்கள் கூறிவருகின்றனர். இதனால் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் வலிமையும் ஒன்று.
பீஸ்ட்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், இப்படத்தில் விஜயை எப்படி கையாண்டுள்ளார் என்பதைக் காண அவரது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
வரும் ஏப்ரலில் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஒரு தரமான பொழுதுபோக்கு படத்திற்கு நிச்சயம் உத்தரவாதம் உண்டு என்ற எதிர்பார்ப்புடன் விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.
எதற்கும் துணிந்தவன்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. பொள்ளாச்சி பாலியல் சம்பவம்தான் படத்தின் மையக்கரு என்று தகவல் பரவிவருகிறது.
மேலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்துக் கதையில் சூர்யா நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜெய்பீம் படத்திற்குப் பிறகு சூர்யாவின் மதிப்பு கிராமப்புறங்களிலும் அதிகரித்துள்ளதால் இப்படமும் சூர்யாவிற்கு வெற்றிப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் 4ஆம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மாறன்
துருவங்கள் பதினாறு', 'நரகாசூரன்', 'மாஃபியா' உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கார்த்திக் நரேன். இவர் தனுஷை வைத்து மாறன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
மாளவிகா மோகனன் நாயகியாக இதில் நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஹாட்ஸ்டாரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முதன்முறையாக கார்த்திக் நரேன் படத்தில் தனுஷ் நடிப்பதால் ரசிகர்களிடயே எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
வெந்து தணிந்தது காடு
‘விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி இணையும் புதிய படம்தான் ‘வெந்து தணிந்தது காடு’. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தனது 47ஆவது படமான இப்படத்திற்கு சிம்பு, 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியிருக்கிறார்.
வழக்கமான கௌதம் மேனன் படமாக இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறு. படத்தின் போஸ்டர், கிளிம்ஸ் வீடியோக்களே அதற்குச் சாட்சி. சிம்பு தற்போது மாநாடு வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கிறார். இப்படமும் அதே போன்ற வெற்றியைத் தரும் என்று இவரது ரசிகர்கள் மட்டுமின்றி சிம்புவும் நம்புகிறார்.