நவரச நாயகன் கார்த்திக் நடித்த 'நந்தவன தேரு' படம் மூலம் நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிருந்தா. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்டோர் நடித்த படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களிலும் பணியாற்றுகிறார்.
இவர் தற்போது புதிதாக இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதாரி என்று இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் - ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
'ஹே சினாமிகா (Hey Sinamika)' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. படத்தின் படப்பிடிப்பை நடிகையும், பிருந்தாவின் நெருங்கிய நண்பருமான குஷ்பூ கிளாப் போர்ட் அடித்து தொடங்கிவைத்தார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணாக தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக பெப்சி, அரசாங்க அறிவுறுத்தல்களுக்கு இணங்க, படப்பிடிப்பு வேலைகள் நாளை (மார்ச் 19) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டியும், பாதிப்படைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டியும், அரசாங்கம், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படியும் நடக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மீண்டும் படப்பிடிப்பு வேலைகள் பெப்சி, அரசாங்க அனுமதியுடன் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.