சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், மூன்று மாதங்களில் மீண்டும் தேர்தலை நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சங்க உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19ஆம் தேதி உத்தரவிட்டார்.
மாவட்ட பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளராக இருந்த விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. அத்துடன் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்த சூழ்நிலையில், தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடந்து முடிந்த நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின் மற்றும் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்தனர்.