தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நடிகர் சங்கத் தேர்தலுக்கு 35 லட்ச ரூபாய் செலவு - புதிய தேர்தலுக்கு இடைக்கால தடை - நடிகர் சங்கத் தேர்தல்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க 35 லட்ச ரூபாய் செலவானதை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக விஷால் தரப்பினர் வாதாடிய நிலையில், தற்போது புதிய தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்ததுடன், ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

actor association election
Interim stay for actor association election

By

Published : Mar 11, 2020, 11:47 PM IST

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக தேர்தல் நடத்த பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், தமிழக அரசு இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த ஆண்டு, ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், சங்க உறுப்பினர்கள் பலரை நீக்கியது தொடர்பாகவும், தபால் வாக்குகள் அளிக்க மறுக்கப்பட்டது தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது எனவும் அவர் அறிவித்தார்.

நடிகர் சங்கத்துக்கு புதிய தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து, 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்க பட வேண்டும், அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பில், நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்தி முடிக்க 35 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும், அதில் 80 % வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் பல மாதங்களாக வாக்குகள் எண்ணாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையெல்லாம் தனி நீதிபதி கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதாக வாதாடப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும். உறுப்பினர்களை சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என்று தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதே வேளையில் நடிகர் சங்கத்தை தனி அதிகாரி தொடர்ந்து நிர்வகிக்கலாம் என குறிப்பிட்டு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:'நடிகர் சங்க விவகாரத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு உதவ தயார்' - சுவாமி சங்கர்தாஸ் அணியினர்

ABOUT THE AUTHOR

...view details