தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விஷாலின் 'சக்ரா' ஓடிடி-இல் வெளியாக பெருந்தொகை உத்தரவாதமாக நிபந்தனை!

'சக்ரா' படத்தை ஓடிடி-இல் வெளியிடுவதற்கு முன்னர் நடிகர் விஷால், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 4 கோடி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் எனவும், படம் வெளியிட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள தொகைக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Oct 21, 2020, 6:39 PM IST

Vishal in chakra movie
சக்ரா படத்தில் விஷால்

சென்னை: நடிகர் விஷால் நடித்த 'சக்ரா' திரைப்படத்தை வெளியிடும் முன் ரூ. 4 கோடிக்கான உத்தரவாதத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு செலுத்திய பின்னர் படத்தை ஓடிடி-இல் வெளியிடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் - தமன்னா நடித்து வெளியான 'ஆக்‌ஷன்' என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, டிரைடெண்ட் நிறுவனத்தின் ரவீந்திரனுக்கு உறுதி அளித்து நடிகர் விஷால் ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் 'ஆக்‌ஷன்' படம் நஷ்டம் ஏற்பட்ட நிலையில், விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இயக்குநர் ஆனந்தன் என்பவர் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒரு கதையை சொல்லி, அதை படமாக எடுக்க ஒப்பந்தமும் செய்துள்ளார்.

இதையடுத்து, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இப்படத்தின் டீஸரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

தங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குநர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து 'சக்ரா' என்ற பெயரில் படம் எடுத்துள்ளதாகவும், அந்தப் படத்தை ஓடிடி-இல் வெளியிட திட்டமிட்டுள்ளதால், படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, 'ஆக்‌ஷன்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில், ரூ. 8.29 கோடி உத்திரவாதத்தை நடிகர் விஷால் அளிக்க வேண்டும் என்றும், எந்த வகையில் உத்தரவாதம் அளிக்க போகிறார் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன்பு மீண்டும் இன்று (அக்டோபர் 21) விசாரணைக்கு வந்தபோது, விஷால் தரப்பில் 'ஆக்‌ஷன்' படத்தை வெளியிட்டதில் வசூலானதாக கூறும் தொகை தவறானது என்றும், குறைந்தபட்ச உத்தரவாதம் அடிப்படையிலேயே ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இரண்டு வாரத்தில் ரூ. 4 கோடிக்கான உத்தரவாதத்தை விஷால் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு தாக்கல் செய்த பின்னர்தான் 'சக்ரா' படத்தை ஓடிடி-இல் வெளியிட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படத்தை வெளியிட்ட இரண்டு வாரத்தில் மீதமுள்ள 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 648 ரூபாய்க்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்தியஸ்தரை டிசம்பர் 23ஆம் தேதிக்குள் நியமிக்கும் நடவடிக்கைகளை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் மேற்கொள்ள வேண்டுமெனவும், மத்தியஸ்தர் உரிய முறையில் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’துக்ளக் தர்பார்’ படத்திலிருந்து ஏன் விலகினேன்? - அதிதி ராவ் ஹைதாரி விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details