தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் ஃபேவரைட் யுவன் #HBD யுவன்சங்கர் ராஜா - Yuvan Shankar Raja

சிம்பிளான ஒரு சில விஷயங்கள் நமக்குள் எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதில் கிடைக்காது. அதுபோலத்தான் யுவனின் இசையும். அவரின் வெறித்தனமான ரசிகர்களிடம் நீங்கள் எப்போதிலிருந்து யுவனின் ரசிகர் ஆனீர்கள் என்று கேட்டால் சற்று யோசிப்பார்கள். நம்மிடம் கேட்காமல் உரிமையோடு நமக்குள் வந்து அமர்ந்துகொண்டவர் யுவன்.

hbd-yuvan-shankar-raja
hbd-yuvan-shankar-raja

By

Published : Aug 31, 2021, 9:37 AM IST

கவிஞர்களின் கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட யாராலும் முடியும். ஆனால் அவர்களின் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் போடுவதற்குத் தனித்திறமை வேண்டும். இதுவரை யுவனுடன் பணியாற்றிய எந்தக் கவிஞரும் எல்லை மீறிய கற்பனையை இசைக்குள் கொட்டியதில்லை.

சிலரைப் பற்றி எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். அவர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் குறித்து எழுத வேண்டுமென்றால் ஒன்று இசையை அறிந்திருக்க வேண்டும் இல்லை அவரை உணர்ந்திருக்க வேண்டும். இசையை அறிவது கடினமான ஒன்றுதான். ஆனால் யுவனை எளிதாக உணரலாம். ஏனெனில் எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி தன்னை ரசிகர்களிடம் முழுவதும் ஒப்படைத்துக்கொள்பவர் யுவன்.

யுவன் சங்கர் ராஜா

90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என யாரிடமும் சென்று உங்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார் என்று கேட்டால் அதில் யுவன் ஷங்கர் ராஜா முதல் மூன்று இடங்களுக்குள் இருப்பார். இசைக்குத் தரம் முக்கியம்தான். அதேசமயம் அந்த இசைக்கு ஈரமும் முக்கியம். தமிழர்களை படுத்திக்கொண்டிருந்த இசையை எம்.எஸ்.வி. அழகுபடுத்தினார், இளையராஜா எளிமைப்படுத்தினார், ஏ.ஆர். ரஹ்மான் அடையாளப்படுத்தினார், யுவன் ஈரப்படுத்தினார். ஆம், யுவனின் இசையும், குரலும் ஈரத்தால் நிறைந்தவை.

அவரது கீ போர்டு ஏராளமான இசையை அள்ளிக் கொடுத்திருக்கிறது. அதேபோல் அவர் வெறும் குரலை வைத்துக்கொண்டு எக்கச்சக்கமான ஹம்மிங்குகளை கொடுத்து அதை ரசிகர்களையும் முணுமுணுக்கவைத்தார். “ஹே ராத்து ஹே ராத்து ஹே ராத்து ஹே” என்று தனது குரலில் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் அவர் கொடுத்த ஹம்மிங் இன்றுவரை பலரால் முணுமுணுக்கப்படுகிறது.

யுவன்சங்கர் ராஜா

முக்கியமாக அந்த ஹே ராத்து ஹம்மிங்கை சாதாரணமாகப் படிக்கும்போதே நம்மை அறியாமல் அந்தச் சொற்களை அதே இசையோடு ஹம் செய்திருப்போம். அது யுவனின் வெற்றி. ஒரு பாடலை பெரும்பாலான இசையமைப்பாளர்கள் ஏதேனும் ஒரு கருவியை வைத்து ஆரம்பித்திருந்த சமயத்தில் யுவனோ ப்ரீ லூடில் தன் குரலை வைத்து ஆரம்பித்தார். அன்றிலிருந்து அவரது குரலுக்கெனவும் பலரின் காதுகள் காத்திருக்க ஆரம்பித்தன.

தற்போதைய இசையமைப்பாளர்கள் நன்றாக இசையமைக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லைதான். ஆனால் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை போல் ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகிறதா என்று கேள்வி கேட்டால் ஆம் என்று பதில் வராது. அதுமட்டுமின்றி இப்போதெல்லாம் ஒரு படத்திற்கு ஆல்பம் ஹிட் கொடுத்துவிட்டாலே, பலரின் கால்கள் தரையில் நிற்பதில்லை, காதுகள் பிறரின் குரலைக் கேட்பதில்லை.

யுவன்சங்கர் ராஜா

ஆனால், 2000த்தின் தொடக்கத்திலிருந்து ஏறத்தாழ 12 வருடங்கள் யுவன் இசையமைத்த பெரும்பாலான திரைப்படங்களின் ஆல்பம் ஹிட். இருப்பினும் அவர் எந்த மேடையிலும் தம்பட்டமோ, துள்ளலோ செய்ததில்லை. அதுமட்டுமின்றி கம்யூனிசம், பெரியாரிசம் என்று சித்தாந்தத்தை குறிப்பதுபோல் யுவனிசம் என்ற ஒரு சொல் முதன்முதலாக உருவானது இவருக்கு மட்டும்தான். அந்த அளவுக்கு அவர் மீது அவரது ரசிகர்கள் வெறிபிடித்திருக்கிறார்கள்.

யுவன் இந்த 24 வருடங்களில் இசையமைக்காத ஜானர் இல்லை. எந்த ஜானர் கொடுத்தாலும் அதில் ஃப்ரீ ஸ்டைலில் தன் ஸ்டைலையும் கலந்து விளையாடுவது அவரின் ஸ்பெஷாலிட்டி. அதேபோல் சின்ன பட்ஜெட் படமோ பெரிய பட்ஜெட் படமோ எனக்கும், என் இசைக்கும் பட்ஜெட் பாகுபாடு கிடையாது என்று இருப்பது அவரிடம் மதிக்கப்பட வேண்டியது. அவரை எந்த வட்டத்திற்குள்ளும் அடக்க முடியாது. அவரால் செல்வராகவனுக்கு ஆகச்சிறந்த மெலடியை இசைக்க முடியும், ராமுக்கு பேரன்பை கொடுக்க முடியும், அமீருக்கு பருத்தி வீரனை அறிமுகம் செய்ய முடியும்.

யுவன்சங்கர் ராஜா

கவிஞர்களின் கற்பனைக் குதிரையை அவிழ்த்துவிட யாராலும் முடியும். ஆனால் அவர்களின் கற்பனைக் குதிரைக்கு கடிவாளம் போடுவதற்குத் தனித் திறமை வேண்டும். இதுவரை யுவனுடன் பணியாற்றிய எந்த கவிஞரும் எல்லை மீறிய கற்பனையை இசைக்குள் கொட்டியதில்லை. தானும், தன் இசையும் எப்படி எளிமையோ அதேபோல்தான் வரிகளும் எளிமையாக இருக்க வேண்டுமென்பதில் இன்றுவரை மிகவும் கவனமாக இருக்கிறார் யுவன்.

அதனால்தான் அவரும் அவரது இசையும் அதில் இடம்பெறும் வரிகளும் எளிமையாக இருக்கின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் யுவனின் மெட்டுக்கள் நமது பக்கத்து வீட்டுக்காரர்கள் போல் பழகவும், கேட்கவும் அவ்வளவு எளிமையாக இருப்பவை. எம்.எஸ்.வியும், இளையராஜாவும் வரிகளுக்கு இசையில் எப்படி வழிவிட்டார்களோ அதுபோலவே யுவனும் செய்தார்.

யுவன்சங்கர் ராஜா

காலத்தால் அழிக்க முடியாத பாடலை ரீ மிக்ஸ் செய்யும்போது அந்தப் பாடலுக்கு குறைந்தபட்ச மரியாதையாவது கொடுக்க வேண்டும். அதை இங்கு சிலர் செய்யத் தவறியிருந்தாலும் யுவன் செய்தார். சில காலம் தனது சொந்த பிரச்சினைகளால் இசையமைப்பதிலிருந்து யுவன் விலகியிருக்க பல இசையமைப்பாளர்கள் வந்து தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்தனர். ஆனால் யுவனின் இடத்தை யாராலும் நெருங்க முடியவில்லை.

இதுவரை யுவனுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரிடம் இருக்கிறது. ஆனால் விருதை கண்டுகொள்ளாமல் என் வேலை ரசிகர்களின் ருசிக்கு இசை அமைப்பதே என்று அமைதியாக இருக்கிறார். அந்த அமைதியும், நிதானமும்தான் எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவரை நெருங்க முடியாத இடத்தில் வைத்திருக்கின்றன.

யுவன்சங்கர் ராஜா

பொதுவாக, “என் படத்துல எப்போதும் இளையராஜா இருப்பார், ராஜா சார் இல்லாம இந்த படம் நடந்திருக்காது, ராஜா சாருக்காகத்தான் இந்தப் படமே பண்ணுனேன்” என இளையராஜாவுக்கு ஒரு இயக்குநர் படையே ரசிகர்களாக இருப்பதுண்டு. அதேபோல் இப்போது, ‘யுவன் இல்லாம என் படம் நடக்காது, யுவனுக்காகத்தான் இந்தப் படமே பண்ணினேன்’ என அவருக்கும் ஒரு இயக்குநர் படை ரசிகர்களாக இருக்கிறது.

யுவன்சங்கர் ராஜா

அப்படிப் பார்க்கையில், தற்கால இசையின் ‘இளைய’ ராஜா தான்தான் என எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி நிரூபித்துவிட்டு அமைதியாக இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க : நினைவில் சேர்ந்திருப்போம்... யுவனும் முத்துவும் இசையின் நட்பு! #HBDyuvan

ABOUT THE AUTHOR

...view details