ஒரு மழை நாளில் கதாநாயகன் மழைக்கு ஏதோ ஒரு இடத்தில் ஒதுங்குகிறான். குடையுடன் போராடிக்கொண்டிருக்கும் அவனை குளிரும் மழையோடு சேர்த்து நனைத்துக்கொண்டிருக்கின்றது. அந்தத் தருணத்தில் மழையை ரசித்துக்கொண்டிருக்கிறாள் கதாநாயகி. பார்த்த உடனே காதல் கொள்கிறான் அல்லது ஈர்க்கப்படுகிறான் நாயகன். இப்படியான காட்சியமைப்பை சச்சின் திரைப்படத்தில் கதாநாயகிக்காக இயக்குநர் ஜான் மகேந்திரன் வைக்கிறார்.
இப்பொழுது இந்தக் காட்சியை நினைவுபடுத்திப் பாருங்கள். வேறொரு கதாநாயகன்... காதலிக்க பெண் தேடி அலைந்து எந்தப் பெண்ணும் தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு இல்லை என நினைத்துக்கொண்டிருக்கிறான். அப்படியான மனநிலையில் கோயிலில் தன்னை ஒருத்தி இடித்துவிட்டு கொம்பு முளைக்கும் என விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும்போது அவளை ஸ்லோ மோஷனில் ரசித்துக் கொண்டிருக்கிறான்.
இரண்டு படங்களிலும் ஒரே கதாநாயகிதான். ஆனால் இந்தப் படங்களில் வேறு எவரேனும் நடித்திருந்தால் அவரை இந்த அளவுக்கு ரசிகர்கள் ரசித்திருப்பார்களா என்று கேட்டால் அதற்கான பதிலை யூகங்களுக்கே விட்டுவிடலாம்.
இந்தக் இரண்டு காட்சிகளும் அவரின் இயல்பான நடிப்பை பறைசாற்றுகின்றன. அப்படி தனது நடிப்பினால் மட்டுமல்லாமல் க்யூட்னஸாலும் ரசிகர்களைக் கட்டிப்போட்டிருந்தவர் ஜெனிலியா.
தமிழ் சினிமாவில் சொற்ப திரைப்படங்களில்தான் நடித்திருந்தார். இருப்பினும் இன்றுவரை ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்திருக்கிறார். எத்தனையோ ஹீரோயின்கள் எக்ஸ்பிரஷன்கள் பல கொடுத்து க்யூட்னஸை வரவழைக்கிறார்கள். ஆனால் ஜெனிலியா போல வருமா என அவரது ரசிகர்கள் சிலாகித்துக் கொள்கின்றனர்.
ஏதோ ஒரு திருமணத்தில் பெண் தோழியாக வந்த ஜெனிலியாவை பார்க்கர் பேனா விளம்பரத்தில் நடிக்க அழைத்திருக்கிறார்கள். பல தயக்கங்களுக்குப் பிறகு அதில் நடிக்க அவர் ஒப்புக்கொள்கிறார். பிறகு 2003ஆம் ஆண்டு அவரது இந்நாள் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்குடன் துஜே மேரி கசம் படத்தில் அறிமுகமாகிறார்.